3390.

     அப்பணி முடி என் அப்பனே மன்றில்
          ஆனந்த நடம்புரி அரசே
     இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்
          டிந்தநாள் வரையும்என் தனக்கே
     எப்பணி இட்டாய் அப்பணி அலதென்
          இச்சையால் புரிந்ததொன் றிலையே
     செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்
          திருவுளம் அறியுமே எந்தாய்.

உரை:

     கங்கையாறு தங்கிய திருமுடியைஉடைய தந்தையே, இன்பத் திருக்கூத்தாடும் அருளரசே, எந்தையே, இவ்வுலகில் எனக்கு நல்லறிவு தோன்றிய நாள் தொடங்கி இந்நாள் வரையும் எனக்கென எத்தகைய பணி செய்தல் வேண்டுமென ஏற்பாடு செய்தனையோ அதனைச் செய்வதன்றி வேறே என் செயலாக யாதும் யான் செய்ததில்லை; இது தவிர யான் சொல்லுதற்கு வேறில்லை; நான் செய்துள்ளவையனைத்தும் நினது திருவுள்ளம் நன்கு அறியும், காண். எ.று.

           அம்பு - அப்பென வலித்தது; கங்கையாற்று நீர் அம்பு எனப்படுகிறது. சிவனது முடிச் சடையில் கங்கையாறு தங்குவது பற்றி, “அப்பணி முடியென் அப்பனே” எனப் போற்றுகின்றார். அப்பன் - தந்தை, உலகுயிர்கட்கு இன்ப முண்டாதல் வேண்டி அம்பலத்தில் இறைவன் திருக்கூத்து ஆடுகின்றா னென்பது பற்றி, “ஆனந்த நடம்புரி யரசே” எனப் புகல்கின்றார். பெருமான் ஆனந்த வடிவினனாதலின், அவனது திருக்கூத்து உயிர்கள் ஆனந்தம் பெறுவது பற்றிய தென வுணர்க. புவி - நிலவுலகம். உயிர்வகை யனைத்துக்கும் வாழிடமாதலால், நிலவுலகு இப்புவி எனச் சுட்டப்படுகிறது. பிறந்து வளரும் குழந்தைகட்குக் கண் முதலிய அறிகருவி யறிவும், கை, வாய் முதலிய செயற்கருவியறிவும், ஓரளவு வளர்ந்த பின்பு கரண வறிவும், நன்கு வளர்ச்சி யுற்ற பின்பே அறிவறிவும் தோன்றுதலாலும், அவ்வறிவுக்கு ஆக்கமாவது இந்நிலவுகலமாதலாலும், “இப்புவிதனிலே அறிவு வந்தது தொட்டு” எனக் கூறுகின்றார். கருவி கரணங்களின் இயக்கம் திருவருளியக்க மென வுணர்வார்க்கு அவற்றால் உள வாகும் அறிவு செயல்கள் திருவருள் வண்ணமாதல் விளங்குதலின், “என்றனக்கே எப்பணி யிட்டாய் அப்பணி யலது” என்றும், கருவி கரணங்களின் வேறாக உயிர்க்குத் தனியே அறிவு செயலின்மையால், “என் இச்சையாற் புரிந்த தொன்றில்லை” என்றும் இசைக்கின்றார். உடல் கருவி கரணங்களின் இயக்க மனைத்தும் இறைவன் திருவருட் செயலாதலால், “செப்புவ தென்னான் செய்தவை யெல்லாம் திருவுளம் அறியுமே” என்று முறையிடுகின்றார்.

     இதனால், உடல் கருவி கரணங்களின் இயக்கத்தின் உண்மை விளக்கியவாறாம்.

     (5)