3391.

     முன்னொடு பின்னும் நீதரு மடவார்
          முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
     பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன்
          புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
     என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே
          எந்தைவே றியம்புவ தென்னோ
     சொன்னெடு வானத் தரம்பையர் எனினும்
          துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.

உரை:

     பொன் வேய்ந்து திகழும் அம்பலத்தின்கண் எழுந்தருளும் அருளரசே, முன்பும் பின்புமாக நீ தர வருகின்ற மகளிர் கூட்டத்தைப் பெற்றேன்; அவர்தம் கூட்டமும் நின்னுடைய திருவருட் புணர்பாலாவதே யன்றி எனது சூழ்ச்சியாலன்று; என் உயிருணர்வோடுடனிருந்து ஒருங்கே யறிகின்ற உனக்கு நான் வேறாக நிறுத்தி உரைப்பது என்ன பயனுடையதாம்; நூலோர் சொல்லுகின்ற நெடிய துறக்க வுலகத்து அரம்பை மகளிராயினும் தனி நிலையில், எந்தையே, எனக்குத் துரும்பெனவே கருதிப் போக்குவேன். எ.று.

     “செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” (கோயில் குறுந்) எனப் பெரியோர் புகழ்தலால் “பொன்னொடு விளங்கும் சடை” என்று புகல்கின்றார். பொன்னம்பலக் கூத்தன் எனப்படுவதால் “சபை நடத்தரசே” என வுரைக்கின்றார். நடத்தரசு என்ற பெயர் நடராசன் எனப் பிற்காலத்தே வழங்குவதாயிற்று. வட சொற்களால் மக்கள் பெயர் பெருக வழங்கலுற்ற போது, “நடராசன், நடேசன்” முதலிய பெயர்கள் பெருகி நிலவுகின்றன. தனித் தமிழ் வழக்கை மாற்றி வடமொழியும் பிற மொழிகளும் கலந்த கலவை மொழியை நாட்டில் உருவாக்கி யாதரிக்கும் முயற்சி செல்வாக்குடைய இனத்தவரிடையே வேரூன்றியதன் விளைவாகத் தமிழர் பலரும் தம்மைத் தனித் தமிழ ரென்றற்கு நாணும் நிலை தமிழர் சமுதாயத்தில் நல்ல இடம் பெற்று விட்டதென வுணர்க. முற்பொழுதினும் பிற்பொழுதினும் பொழுது வாய்க்கு மிடத்தில் எல்லாம் மகளிரின் கூட்டம் எய்தினமை கூறுவார், “முன்னொடு பின்னும் நீ தரும் மடவார் முயக்கினிற் பொருந்தினேன்” என வுரைக்கின்றவர், அம்மகளிர் தாமும் இளநலம் கனிந்தவர் என்பது புலப்பட, “மடவார்” என வுரைக்கின்றார். முன்னொடு பின்னும் என்றதற்கு முன்பொருகாலே யன்றிப் பின்னரும் பன்முறையும் கூட்டம் பெற்றேன் என்ற பொருள்பட நிற்பதறிக. மகளிர் கூட்டத்தை நயவாத தமக்கு அவரது கூட்டம் உளதாயினமைக்கு ஏது திருவருட் புணர்ப்பு என்பாராய், “அதுவும் உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே” என இயம்புகின்றார். புணர்ப்பு - கூட்டுதல்; சூழ்ச்சியுமாம். உயிர்க்குயிராய் உணர்வினுள் உடனிருந்தறிதல் இறைவன் செயலாதலால், “என்னொடு மிருந்திங் கறிகின்ற நினக்கு” என்றும், நின்னின் வேறே யிருந்து உரையாடல் எனக்கு இயலாதாதலால், “எந்தை வேறு இயம்புவ தென்னே” என்றும் இயம்புகின்றார். நினது திருவருட் புணர்ப்பு இல்லையாயின் துறக்க நாட்டுத் தேவ வரம்பை மகளிரும் எனக்குத் துரும்பாய்த் தோன்றிப் புறக்கணித்தொதுக்கப்படும் பொருளாவர் என்பார், “சொன்னொடு வானத்து அரம்பைய ரெனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே” என்று சொல்லுகின்றார். நூல்களாலன்றிக் கண்ணாற் காணப்படுவ தன்மையின், வானுலகத்தைச் “சொன்னொடு வானம்” எனவும், போக நுகர்ச்சிக் கென்றே யமைந்த பெண்களாதலால் தேவ மகளிரை, “வானத்து அரம்பையர் என்றும், அம்மகளிரின் போக வேட்கையைத் தூண்டி நுகர்விப்பது நின் திருவருள்; அதன் செயற் பாட்டிற் பொருந்தாமல் யான் அதனின் தனிப்பேனாயின், அந்த அரம்பை மகளிர், ஏனை மகளிரினும் கடைப்படுவ ரெனின் போக நினைவுக்கு இடமாதலை எண்ணிப் போக நினைவுக்கே இடம் தராத பொருளாகிய துரும்பை எடுத்துக் “துரும்பெனக் காண்கின்றேன்” என வுரைக்கின்றார்.

     இதனால் போக நுகர்ச்சியும் திருவருட் புணர்ப் பெனப் புகன்றவாறாம்.

     (6)