3392.

     இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில்
          எய்துவித் திடுதியேல் அதுவுன்
     தன்னுளப் புணர்ப்பிங் கெனங்கொரு சிறிதும்
          சம்மதம் அன்றுநான் இதனைப்
     பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப்
          பால்உணும் காலையே உளதால்
     மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என்
          மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.

உரை:

     நிலை பெற்ற அம்பலத்தின்கண் திருக்கூத்தாடும் பெருமானே, இவ்வுலகில் இனிமேலும் என்னை மடந்தையர் புணர்ச்சியில் ஈடுபடுத்துவையாயின் அதுதானும் தான் நுகர்தல் வேண்டி நீ என்னைப் புணர்ப்பதாகும்; எனக்கு அதன்கண் சிறிதளவும் இசைவில்லை; நான் இதனைச் சொல்ல வேண்டா; இதன்கண் எய்தும் அருவருப்பு அவரது பக்கத்திலிருந்து நுகரும் போதும் உளதாகிறது; எனது நன்மதிப்பனைத்தும் நினது திருவடித் தாமரைக்கே யாம். எ.று.

     மகளிர் கூட்டத்தை நயவாத தம்பால் அது வருவது திருவருட் குறிப்பென நினைக்கின்றாராதலின், அத்திருவருள் மேலும் தம்மை அதன் கண் ஈடுபடுத்தல் கூடாதென முறையிடுகின்றாராகலின், “இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல்” என உரைக்கின்றார். பின்னும் அஃது எய்துமாயின், அது திருவருள் புணர்ப்பாமே யன்றி எனது கருத்திசைந்து ஏற்றதாகாது என்பார், “அது வுன்றன் உணப்புணர்ப்பு” என்றும், “எனக்கு ஒரு சிறிதும் சம்மதம் அன்று” என்றும் இசைக்கின்றார். எனது உண்ணின்றருளி ஆங்கு நிகழும் எண்ணங்கள் அனைத்தும் அறிந்துளாயாதலால், யான் எடுத்துரைப்பது பயனில் உரையாகும் என்பாராய், “நான் இதனைப் பன்னுவதென்னே” என மொழிகின்றார். பால் - பக்கல். இவ்வாறு புணர்க்கும் செயலினும் நின் திருவடிச் சிறப்பே எனக்கு வேண்டுவதாம் என வற்புறுத்தற்கு “மதிப்பெலாம் திருவடி மலர்க்கே” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால், மகளிர் புணர்ப்புத் திருவருளால் எய்தினும் மதியேன் என வற்புறுத்தவாறாம்.

     (7)