3393. அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே
அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்தநீ அறிதி
இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்
திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர்
எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
உரை: எந்தை பெருமானே, அறிவறியாச் சிறு பருவத்திலேயே உணவுண்பதில் விருப்பில்லா திருந்த எனது இயல்பை என்னுடன் பிரிவில்லாமல் கலந்திருந்த நீ அந்நாளில் நன்கு அறிவாய்; இந்நாளில் நான் அதனை எடுத்துரைப்பதால் பயன் யாது? அடக்கப் பண்பின்றிக் கீழ்மையுற்றேனாயினும், நின் திருவடியல்ல தில்லாதவனாகிய யான் நின் திருவருளாகிய அமுதத்தையே விழைந் துறைகின்றேன்; வெறுத்தற்கில்லாத சுவைகள் வேறு எவற்றினும் ஒர் எள்ளத்தனையும் விருப்பம் எனக்கு இல்லை. எ.று.
கருவி கரண வறிவு நிரம்பாத சிறு பருவத்தை, “அறிவிலாச் சிறிய பருவம்” என்று குறிக்கின்றார். போதிய சுவை யுணர்வில்லாமையால் சிறுவர் சிலர் உணவு கொள்ள வெறுத்து மறுத்தல் இயல்பாதலால், “அருந்தலில் எனக்குள வெறுப்பை” என்றும், உயிர்க்குயிராய் உடனிருந்தறியும் இறைவற்கு இஃது அறிந்த உண்மையாதலால், “பிறிவிலாது என்னுட் கலந்த நீ அறிதி” என்றும், எல்லா மறிந்த பெருமானாகிய உனக்கு மீள உரைப்பது பயன் தருவதாகா தென்பார், “இன்று நான் பேசுவ தென்னே” என்றும் இயம்புகின்றார். அடங்காத் தன்மை அறியாமை யிருளிற் கிடத்திக் கீழ்மையுட் படுத்துமாதலால், “செறிவிலாக்கடையேன்” எனவும், ஆயினும் திருவருள் ஞான மொன்றையே பெரிதும் விழைந்து நின்றமை புலப்பட, “திருவரு ளமுதமே விழைந்தேன்” எனவும், இக்கருத்தை வற்புறுத்துவாராய், “சுவை வேறு எவற்றினும் விழைவு ஓர் எட்டுணை யேனும் இன்று” எனவும் இயம்புகின்றார். வெறுத்து நீக்கலாகாத சுவையை “எறிவிலாச் சுவை” என வுரைக்கின்றார்.
இதனால், திருவருளமுதத்தின் விழைவு மிகுதி புலப்படுத்தவாறாம். (8)
|