3394. இன்சுவை உணவு பலபல எனக்கிங்
கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும்
நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும்
சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன்
தேடிய தும்இலை ஈண்டே.
உரை: எந்தை பெருமானாகிய சிவனே, நீ இனிய சுவையுடைய உண்பொருள்கள் பல வேறாயவற்றை எனக்குப் பிறரை யளிக்கச் செய்கின்றாயாகலின், சிறியவனாகிய யான் அவற்றை நீ தந்த நின்னுடைய சுவைப் பண்டமென்று கருதியே யுண்கின்றேன்; மேலும் நீ தருவித்தளித்தாலும் அது நின்னுடைய உரிமை; அதன்கண் இடை புக எனக்குச் சிறிதும் விருப்பமில்லை; நான் தானும் எனது உரிமையெனக் கருதி ஒன்றையும் தேட மாட்டேன்; இப்பொழுதும் நான் தேடியதில்லை. எ.று.
இன்சுவை யுணவு - பல்வேறு இனிய சுவை யூட்டப் பெற்ற தின்பண்டங்கள். சுவையினும் யுருவினும் வேறாயவை என்றற்குப் “பல பல” என்று குறிக்கின்றார். கொடுப்பானும் அடுப்பானும் உண்பானும் உண்பிப்பானும் எல்லாம் திருவருள் இயக்கம் என்னும் உணர்வு மீதூர்ந்தமை விளங்க, “இன்சுவை யுணவு பலபல எனக்கு இங்கு நீ கொடுப்பிக்கச் சிறியேன் நின் சுவை யுணவென் றுண்கின்றேன்” என இசைக்கின்றார். மேலும் பல தருதலும் விரித்தலும் பிறவும் எல்லாம் திருவருளின் தனி யுரிமையாம் என்பதை “அது நின்றன் சுதந்தரம்” என்றும், திருவருளின் வரம்பகன்ற சுதந்தரத்தின் ஆன்மாக்கள் இடை புகல் இன்மையும் அருமையும் விளங்க, “எனக்கதில் இறையும் சம்மதம் இல்லை” என்றும், திருவருள் நலங்களை நாடித் தேடுவது என்னுடைய சுதந்தரமாகாமையின், “தேடுவேனல்லேன் தேடியதும் இல்லை” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதனால் ஆன்மாவின் சுதந்தரமின்மை விளக்கியவாறாம். (9)
|