3397. கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் அளவும்
கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன்
இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொருசிறிதும்
தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான்
இயம்பல்என் நீஅறிந் ததுவே.
உரை: எந்தை சிவபிரானே, தழைத் திருக்கின்ற இந்த உடம்பின் மேல் எள்ளத்தனையும் ஆசை கொண்டிலேன்; பசி நீங்கும்படி உணவு அருந்தும் போதும் வெறுப்போடே உண்டேன்; இப்பொழுதும் வெறுப்புடனே உண்கின்றேன்; கட்டுப்படுத்தி முடை நாற்றம் செய்யும் தசையுற்ற இவ்வுடம்பு ஒரு சிறிதளவும் தசை பெருக நான் விரும்பவில்லை; இனிமேலும் என் உடம்பு மெலிய வேண்டுமெனவே விழைகின்றேன்; இதனை நான் சொல்வதாற் பயனில்லை; என்னுள் இருக்கும் நீ அறிந்த தாகலான். எ.று.
கை கால் விரல் முதலிய வுறுப்புத் தோறும் உரிய அளவு தசை பொருந்த உணர்ச்சியுற்ற உடம்பைக் “கிளைத்த வுடம்பு” எனக் கூறுகின்றார். உலகில் வாழ்வாங்கு வாழ்தற்கு என இறைவன் படைத்தளித்த அருள் பொருளாதலின் உடம்பின் மேல் உயிருக்கு ஆசை யுளதாவது முறையாயினும் மிக்க வழி நோயும் துன்பமும் உண்டாவது கொண்டு, “கிளைத்த இவ்வுடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன்” என இயம்புகின்றார். கிளைத்தல் - பெருகுதல் பசியளவுக்கு மிகினும் குறைந்த வழியும் துன்பமும் வருத்தமும் தோன்றுதலால், “பசியற வுணவு திளைத்திடும் தோறும் வெறுப்பொடும் உண்டேன்” என்றும், அவ்வெறுப்பு முப்போதும் நீடிக்கின்றது என்றற்கு “இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன்” என்றும் கூறுகின்றார். தளைத்தல் - கட்டுதல்; உடம்பின்கண் எழும் நாற்றம் மனம் பொருந்தாத நிலையினதாதலால், “தளைத்திடு முடை யூன் உடம்பு” என இழிக்கின்றார். ஞானத்தால் நறுமணப் பேற்றுக்குரிய உடம்பு ஊன் பெருகி முடை நாறுவது வேண்டத்தக்க தன்மை பற்றி, “முடை யூன் உடம்பொரு சிறிதும் தடித்திட நினைத்திலேன்” எனவும், ஊன் தடியின் சேட்டை குறையின் நோயகன்று இன்பநிலை யமையும் என்பது பற்றி, “இன்னும் இளைத்திட விழைகின்றேன்” எனவும் கூறுகின்றார். உள்ளத்தில் உள்ளிருந்து உள்குவார் உள்குவது முற்றும் உடனிருந்தறிபவன் இறைவனாதலால், “இது நான் தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே” என வுரைக்கின்றார்.
இதனால் உடம்பின் மேல் ஆசையின்மை விளம்பியவாறாம். (12)
|