3398.

     இவ்வுல கதிலே இறைஅர சாட்சி
          இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
     எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன்
          எண்ணுதோ றருவருக் கின்றேன்
     அவ்வுல கதிலே இந்திரர் பிரமர்
          அரிமுத லோர்அடை கின்ற
     கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன்
          எந்தைஎன் கருத்தறிந் ததுவே.

உரை:

     எந்தையாகிய சிவனே, இந்த நிலவுலகத்தில் அரசனாயிருந்து பெறும் அரசு செலுத்த எய்தும் இன்பத்திலும், மற்றைய செல்வ வாழ்வு நல்கும் இன்பத்திலும் எத்துணையும் விருப்பமுற் றறியேன்; அவ் வின்பங்களை நினைக்கும் போதும் அருவருப்பையே அடைகின்றேன்; இனி மேலுலகடைந்து ஆங்குப் பெறலாகும் இந்திர போகம் திருமால் பிரமன் முதலிய தேவருலக போகமாகிய பெயர் பெற்ற போகங்களிலும் ஆசை கொண்டதில்லேன்; எனது இக் கருத்து நீ அறிந்ததன்றோ. எ.று.

     உடம்பெடுத்து வாழ்கின்ற மண்ணக வாழ்வை “இவ்வுலகு” எனக்குறித்து, இவ்வுலகில் நுகரப்படும் இன்ப வாழ்வுகளில் அரசியற் போகம் உயர்வுடைய தென்பது பற்றி, “இறையரசாட்சி இன்பம்” எனப் புகல்கின்றார். அரசர் மதிக்க உயரும் தொழில், வாணிகம், பொருள் அறிவுகளால் உண்டாகும் இன்ப வாழ்வை, “மற்றை யின்பம்” எனக் கூறுகின்றார். இவ்வின்பங்கள் நெடிது நுகருமளவு பெருமை யுடையவாயினும் என்னால் விரும்பப்படுவன வல்ல என்பாராய், “எவ்வள வெனினும் இச்சையொன்றறியேன்” என்றும், இடையிடையே அவற்றை ஈட்டல் காத்தல் முதலிய செயல்களால் விளையும் துன்பங்களால் மனம் வெறுப்புறுவது கருதி, “எண்ணுதோறு அருவருக்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். தேவருலகம் - உழைப்பின்றி நெடிதிருந்து போக மொன்றே நுகரும் தேவருலகம். அவ்வாழ்வும் அடிக்கடி அசுரர்களால் தாக்கப்பட்டுச் சிறை படல், கொலை யுண்டல் முதலிய துன்பங்கட்கு இடமாதலைப் புராணங்கள் எடுத்துரைத்தலால், “இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற கவ்வை யின்பத்தும் ஆசை சற்று அறியேன்” என உரைக்கின்றார். கவ்வை - பலர் பேசுதலால் உண்டாகும் ஆரவாரம். யாவர் உள்ளத்தும் உண்ணின்று அறியும் பரம்பொருளாதலின், “எந்தை என் கருத் தறிந்ததுவே” என்று எடுத்தோதுகின்றார்.

     இதனால், இம்மை யரச போகமும் மறுமைத் தேவ போகமும் விரும்பாமை விளக்கியவாறாம்.

     (13)