3399.

     சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும்
          சாற்றிடும் யோகமோர் நான்கும்
     புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது
          புந்தியில் ஆசைசற் றறியேன்
     பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
          பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
     உரியதோர் இச்சை எனக்கிலை என்றன்
          உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

உரை:

     சரியையிற் சரியை முதலாகவும், கிரியையிற் சரியை முதலாகவும், மேலும் ஓதப்படும் யோகத்திற் சரியை முதலாகவும் நந் நான்காக உரைக்கப்படும் தவவொழுக்கங்களைச் செய்யவும் அவற்றின் பயனாகிய பதமுத்திகளை அடையவும் என் மனத்தின்கண் ஆசை கொண்ட தில்லேன்; பெரியவாகிய ஞானத்திற் சரியை முதலாக வரும் நான்கும் பெறற்கு விரும்புகின்றேனில்லை; இதன் முடிவாகிய பரமுத்தியை எய்தவும் அமைவதாகிய ஆசை எனக்கு உண்டாகவில்லை; என் மன நினைவு முற்றும், எந்தாய், நீ அறிந் தன்றோ? எ.று.

     சரியை கிரியை யோகம் ஞானம் எனச் சிவநெறி கூறும் தவம் பொதுவகையில் நான்காயினும், ஒவ்வொன்றும் சரியையிற் சரியை சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம், என நான்காக விரியும். அவற்றுள், “திருக்கோயில் அலகிடல், மெழுகல் முதலியன சரியையிற் சரியை; ஐயைந்து மூர்த்திகளில் விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த்திகள் ஒரு மூர்த்தியைப் பூசித்தல் சரியையிற் கிரியை; நெஞ்சின் கண் உருத்திரக் கடவுளைத் தியானம் செய்தல் சரியையிற் யோகம்; அத்தியான பாவனையின் உறைப்பால் ஓர் அனுபவ வுணர்வு நிகழ்தல் சரியையில் ஞானம்”; இவ்வாறே கிரியை யோக ஞானங்கள் முறையே நந்நான்காய் விரிகின்றன. இவற்றின் விரிவை மாதவச் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடியத்து எட்டாம் சூத்திர வுரையிற் காணலாம். சரியை முதலியவற்றை மேற்கொண்டோர் எய்தும் பயன்களில் முதல் மூவர் எய்துவன பதமுத்தி யென்றும், ஞானத்தார் எய்துவது பரமுத்தி யென்றும் பெரியோர் கூறுதலின், “சரியை முதல் நான்கும் புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்றறியேன்” என வுரைக்கின்றார். உபாய ஞானத்தின் வேறாய்க் கூறப்படும் உண்மை ஞானத்தை பெரியோர் ஞான நான்கென்பவர் அதனால் விளையும் பயனையும் வேண்டேன் என்பார், “பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன்” என்றும், ஞானப் பெரும்பயனாகிய முத்தியின் கண் இச்சை யிலை என்ற கருத்தை, “முத்தி பெற்றிடவும் உரியதோர் இச்சை எனக்கில்லை” என்றும் இயம்புகின்றார். “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (பெரியபு) என்ற சேக்கிழார் திருவாக்கு இதனை வலியுறுத்துகிறது. தாம் கூறும் இவ்வுரையது உண்மை விளக்குதற்கு “என்றன் உள்ளம் நீ அறிந்ததே” என்று உரைக்கின்றார்.

     இதனால், உபாயம், உண்மை என்ற இருவகைச் சரியை யாதி தவப் பயன்களில் இச்சையின்மை தெரிவித்தவாறாம்.

     (14)