3400. இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான்
இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே.
உரை: எந்தையாகிய சிவபிரானே, இவ்வுலகில் இறந்துபடுதற்கும் எனக்கு விருப்ப முண்டாகவில்லை; இப்படியே பயனற்றிருந் தொழிவதற்கும் விருப்பமில்லை; இறந்த பின் வேறு பிறப்பெடுக்கவும் ஆசை யுண்டாகிற தில்லை; இனி, இவ்வுலகில் இவர் பெரியவர் பெரியவர் எனக் கண்டோர் சிறப்பிக்கின்ற நிலையைப் பெற ஆசை கொள்ளவில்லை; மந்திர தந்திர சாலங்கள் செய்யவும் ஆசையில்லை; உலகியற் பற்றற்ற துறவி யாதற்கும் எனக்கு விருப்பமில்லை; இன்பம் சிறிதுமின்றி, துன்ப நிலையிலேயே இருக்கவும் விருப்புண்டாக வில்லை, காண். எ.று.
கருதிய பயன் எய்தாவிடத்து வாழ்வு பயனில்லாதாவது எண்ணி உயிர் வாழ்வில் வெறுப்படைந்து சாவை விரும்புவோர் பலராதலின், “இறக்கவும் ஆசையில்லை” எனவும், தான் இருப்பதால் தனக்கோ பிறர்க்கோ பயன் உண்டாகமை கண்டு, “இப்படி நான் இருக்கவும் ஆசையின்று” எனவும், வேறு பிறப் புண்டாயின் நற்பயன் விளையுமென நினைவு தோன்றுதல் பற்றி, “இனி நான் பிறக்கவும் ஆசையில்லை” எனவும் மனம் சலிக்கின்றார். வாழ்விற் பெறலாகும் நலங்களை எண்ணுமிடத்துப் பலரும் கண்டு இவர் ஒரு பெரியவர் எனச் சொல்லிப் போற்றப்பெறுவது சிறப்பாதல் காணப்படுதலால், “உலகெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசையிலை” எனவும், பலருடைய வியப்பையும் பாராட்டுதலையும் பெறுவோர் அரிய அறிவு செயல்களை யுடையராதல் வேண்டும்; போலிப் புகழாவன சின்னாட்களில் மாய்ந்து மறைந்து துன்பம் செய்தலால் அவற்றையும் வேண்டே னென்பாராய், “விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்றில்லை” எனவும் விளம்புகின்றார். விசித்திரம் - மந்திர தந்திர சால வித்தைகள். கல்வி அறிவில்லாத மக்களிடையே வஞ்சமும் கரவு முடையவர் புகுந்து, அவரது அறிவு மயங்கத் தகுவன காட்டி ஏமாற்றும் செயல் வகை விசித்திரம். “யாதெனின் யாதனின் நீங்கி யான் நோதல், அதனின் அதனின் இலன்” (குறள்) எனப் பெரியோர் உரைப்பது துறவு இன்பத்துக்கு ஏதுவாம் என்பது கண்டு இன்பம் காணாமையால் வருந்துகின்றமை தோன்ற, “துறக்கவும் ஆசை இலை” எனவும், துன்ப மிகுதி அறிவையும் மனப்பண்மையும் செம்மையுறுத்துவன என அறிஞர் அறிவுறுப்பது பற்றி, “துயரடைந்து தூங்கவும் ஆசை ஒன்றிலை” எனவும் இயம்புகின்றார்.
இதனால், பிறப் பிறப்புக்களிலும் துறவு துறவாமைகளிலும் உற்ற கருத்துக்களை எடுத்தோதி ஆறுதல் பெற்றவாறாம். (15)
|