3402. உருமலி உலகில் உன்னைநான் கலந்தே
ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன்
உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்
கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச்
செய்யவும் இச்சைகாண் எந்தாய்.
உரை: உருவும் அருவுமாகிய பொருள்கள் நிறைந்த வுலகில் சிவ பரம்பொருளாகிய உன்னோடு கூடிக் கலந்து ஊழூழிக் காலம் மாறினும் உன்னிற் பிரியாமல் ஒருமை நிலையுற்று என்றும் கெடாத பெருமையுற்று உன்னையே பாடியும் பரவச முற்றுத் திருமுன்பு நின்று ஆடியும் பெரிய இந்த நிலவுலகத்தில் உயர்வு பெற்று மகிழவும், பிறர்க்குத் துன்ப முண்டாயின் அதனைப் போக்கி அவர்களைத் திருவுடைய மணி யிழைத்த பொன்னம்பலத்தின்பால் அன்புடையவராகச் செய்யவும் என் மனம் ஆசை கொள்கின்றது. எ.று.
நிலமும் நீரும் தீயும் காற்றும் போன்ற உருவப் பொருள்களும் வானம் போன்ற அருவப் பொருள்களும் நிறைந்தது உலகமாகலின், “உருமலியுலகு” என எடுத்து மொழிகின்றார். நமது உடம்பு உருவப் பொருளாகவும் உயிர் அருவப் பொருளாகவும் இருப்பதொன்றே இதற்குப் போதிய சான்றாகும். உருவில் அருவம் கலந்து ஒன்றி யிருப்பது போல உன்னுருவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்பாராய், “உன்னை நான் கலந்து” எனவும், உருவுடைய வுடம்பினின்றும் அருவமாகிய உயிர் பிரிவது போலின்றி உன்னிற் பிரியா திருக்க வேண்டும் என்பது தோன்ற, “ஊழி தோறூழியும் பிரியாது ஒருமையுற்று” எனவும், உடலுயிர்க் கலப்பின்கண் சிறுமை பெருமைகள் உளவாதல் போலின்றி, என்றும் பொன்றாத பெருமையே உண்டாதல் வேண்டும் எனற்கு, “அழியாப் பெருமை பெற்று” என்றும் இயம்புகின்றார். பெருமைக்கு இன்றியமையாத செயல் ஒன்று வேண்டுமாகையால் அச் செயல் இதுவெனக் கூறுபவர், “அடியேன் உன்னையே பாடி நின்றாடி இருநிலத் தோங்கிக் களிக்கவும்” என வுரைக்கின்றார். புணர்தலும் பிரிதலும் உலகிற் பொருளியலாதலால், “ஊழி தோறூழியும் பிரியாது” என்றும், பண்பும் செயலும் பொருந்தா விடத்துப் பொருளின் ஒருமைத் தன்மை கெடுமாகலின், அக்குறைபாடு உண்டாகாமை வேண்டி, “ஒருமையுற்று” என்றும், பண்பினும் செயலிடத்துத் தோன்றும் சீரழிவு, கலந்த கலப்பின் பெருமையைச் சிதைப்பது இயல்பாதல் கண்டு, “அழியாப் பெருமை பெற்” றென்றும் பேசுகின்றார். மூவகைப் பிறவித் துன்பத்தையும் நல்கி வாழ்வாரை வீழ்த்துவது பற்றி, “இரு நிலத்து ஓங்கிக் களிக்கவும்” என இசைக்கின்றார். உலகில் தன்னொப்பப் பிறந்து வாழ்பவர் இனிது வாழ்ந்தாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்று உணர்ந்தாலன்றி ஒருவர்க்கு உலக வாழ்வு உயர்வும் உறுதியும் பயவாதாகலின், “பிறர்க்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்து” எனவும், திருச்சிற்றம்பலத்தின்பால் அன்புண்டாயின் இந்நலங்கள் கைவரும் என்பது பற்றி, “திருமணிப் பொதுவில் அன்புடையவராகச் செய்யவும் இச்சை காண்” எனவும் விண்ணப்பிக்கின்றார்.
இதனால் ஒருமை வாழ்வு வேண்டினமை தெரிவித்தவாறாம். (17)
|