3405.

     திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும்
          சிதம்பரம் எனும்பெருங் கோயில்
     உருவளர் மறையும் ஆகமக் கலையும்
          உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
     மருவளர் மலரின் விளக்கிநின் மேனி
          வண்ணங்கண் டுளங்களித் திடவும்
     கருவளர் உலகில் திருவிழாக் காட்சி
          காணவும் இச்சைகாண் எந்தாய்.

உரை:

     எந்தையே, சிவஞானம் நிலவுகின்ற திருச்சிற்றம்பலத்தின் கண் சிறப்புறும் சிதம்பரம் எனப்படும் பெரிய திருக்கோயில் இருக்குக்களால் மிகுகின்ற வேதமும் ஆகமக் கலை நலமும் உரைக்கும் நெறியில் திருத்தமுறப் புதுக்கி, மணமிக்க தாமரை மலர் போல அமைத்து அதன் கண் சிவபிரானுடைய திருமேனியை எழுந்தருள்வித்து அழகமையப் புனைந்து கண்டு மகிழவும், இயற்கைப் பொருள் நிறைந்த இவ்வுலகின்கண் திருவிழா வெடுத்துக் கண்டு இன்புறவும் என் உள்ளம் விரும்புகின்றது, காண். எ.று.

     திருச்சிற்றம்பலத்துக்குத் திருவாவது சிவஞானமாதலின், “திருவளர் திருச்சிற்றம்பலம்” எனக் கூறுகின்றார். “செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்” (ஞானசம்) என்று பராவுவது பற்றி இவ்வாறு கூறப்படுகிறது எனினும் அமையும். திருச்சிற்றம்பலத்தை ஊர்ப் பெயராகவும், சிதம்பரத்தைத் திருக்கோயிலின் பெயராகவும் வள்ளலார் கருதுகின்ராகலின், “திருச்சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெருங் கோயில்” எனத் தெரிவிக்கின்றார். “உருவளர் மறை” என வுரைக்கின்றார். தமிழ்நாட்டில் திருக்கோயில்களின் அமைப்பையும் அவற்றுள் நடைபெறற்குரிய செயல் முறைகளையும் உரைப்பன ஆகமங்கள்; அவற்றுள் சிவாகமம் காமி முதல் வாதுளமீறாக இருபத்தெட்டென்பர்; அவைகளில் ஒன்றான மகிடாகம நெறியில் இயன்றது தில்லைப் பெருங்கோயில். கல்வி கேள்வி யோடமையாது செயற்பாட்டினைப் பெரிதும் வற்புறுத்துவதால் “ஆகமக் கலை” எனக் குறிக்கின்றார். ஆகமக் கலை யுரைத்த நெறியிற் பிறழ்ந்து பொய்யும் வழுவும் புகுந்து பழுதுற்றமை காண்கின்றமையின், “உரைத்தவாறு இயல் பெறப் புதுக்கி” எனவும், எட்டிதழ்த் தாமரை மலர் வடிவில் திருக்கோயில் அமைதலை விழைகின்றாராகலின், “மருவளர் மலரின் விளக்கி” எனவும் விளம்புகின்றார். கூத்தப் பிரானது சகளத் திருமேனியை நினைப்பதுபற்றி, “நின் மேனி வண்ணங் கண்டு களித்திட” என்றும், பலரும் தத்தம் இல்லிருந்து திருவீதி விழாக் காட்சி பெற்று இன்புறும் திறம் விளங்கத் “திருவிழாக் காட்சி காணவும் இச்சை காண்” என்றும் உரைக்கின்றார். பல்வகை யுருவும் நிறமும் பான்மையு முடைய இயற்பொருள் பல்கியது உலகமாகலின், “கருவளர் உலகு” எனப் புகழ்கின்றார். கருவளர் உலகு என்பதற்குப் பல்வகைப் பிறவிகட் கிடமாகி வுலககென வுரைத்து, அப் பிறவிப் பேறுகளைத் தவிர்க்கும் சால்புடையது திருவிழா என்ற கருத்துப் புலப்பட, இவ்வாறு கூறுகின்றார் என்றலுமொன்று.

     இதனால், சிதம்பரம் புதுக்கித் திருமேனி கண்டு திருவிழா வெடுக்கும் ஆர்வம் தெரிவித்தவாறாம்.

     (20)