3406.

     தங்கமே அனையார் கூடிய ஞான
          சமரச சுத்தசன் மார்க்கச்
     சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்
          சார்திருக் கோயில்கண் டிடவும்
     துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி
          துலங்கவும் சங்கத்தில் அடியேன்
     அங்கமே குளிர நின்றனைப் பாடி
          ஆடவும் இச்சைகாண் எந்தாய்.

உரை:

     புடமிட்ட தங்கத்தை யொத்த சான்றோர் கூடுகின்ற சமரச ஞான சுத்த சன்மார்க்கச் சங்கம் நிறுவி மகிழ்தற்கும் அச்சம் இருந்து செயல் புரிதற்கெனக் கோயில் அமைக்கவும், உயர்வு பெறும் அச்சற்சங்கம் நீடுழி காலம் பணி புரிந்து விளக்குதற்கும், அதன்கண் அடியவனாகிய யான் உடம்பகம் குளிர நின் திருமுன் நின்று இன்பக் கூத்தாடற்கும் விரும்புகின்றேன், காண். எ.று.

     உலகியல் துன்பத் தீயால் சுடப்பட்டு அறிவும் மனமும் ஒழுக்கமும் தூயராகிய சான்றோர்களை ஈண்டுத் “தங்கமே யனையார்” எனச் சிறப்பிக்கின்றார். அப்பெருமக்கள் கூடும் சங்கம்” அறிஞர் இகழ்தற்குரிய பேதம் காணாத ஞான நிலையமாதலால், “சமரச ஞான சங்கம்” என்றும், அச் சங்கம் காட்டும் நெறிகளும் முறைகளும் தூய மெய்ம்மை யமைந்தவையாதலால், “சுத்த சன்மார்க்கச் சங்கம் கண்டு களிக்கவும்” என்றும் இயம்புகின்றார். சித் முத்திரை சின் முத்திரை யென வருதல் போலச் சத்மார்க்கம், சன்மார்க்கம் என வந்தது. சத்து - மெய்ம்மை; மார்க்கம் - நெறி. ஆகவே, மெய்ந் நெறி சன்மார்க்கம் எனப்படுவது காண்க; சேக்கிழார் பெருமான், “இலகு மெய்ந்நெறி சிவ நெறியது” (ஞானசம்) என்பது காணலாம். சன்மார்க்க ஞான நெறிக்குத் தூய்மை பேத நினைவு இல்லாமை. “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார், எம்மையுடைமை எமை இகழார் - தம்மை, உணரார் உடற்கியைந்து தம்மிற் புணரார்” என மெய்கண்ட தேவர் விளங்க வுரைப்பது காண்க. இக் கருத்தையே பிறிதோரிடத்தே வள்ளற் பெருமான், “எத்தனையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி யுள்ளே, எத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவர் அவருளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தெரிந்தேன் அந்த வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட வென் சித்தமிக விழைந்தாலோ (5297) என அறிவுறுத்துகின்றார். சுத்த சமரச சன்மார்க்க ஞானிகளாலும் அவரது கூட்டம் காண்டலும் அரிய தொன்றாகலின், “சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கண்டு களிக்க” என விழைகின்றார். சங்கம் - கூட்டம். அச்சங்கம் உயிரினங்களின் இன்ப வாழ்வுக்கு உறுதி நல்கும் உயர்வுடையாதல் கண்டு, அது நிகழும் இடம் தலையாய நிலையமாதலின், அதனை யமைத்தலை, “சங்கம்சார் திருக் கோயில் கண்டிட” விரும்புகின்றார். கோயில் - தலையாய இடம். மன்னுயிர்கட்கு நன்மை பயக்குமாற்றால் உயர்வு மிகும் அச்சங்கம் பொருள் வளம் பெற்று நெடுங்காலம் நின்று நிலவுவது உள்ளூர்ப் பழுமரம் தண்ணிய நிழலும் நறுமண மலரும் இன்சுவைக் கனியும் தாங்கி நிற்றல் போல்வது பற்றி, “துங்கமே பெறும் சற் சங்கம் நீடூழி துலங்க” வேண்டுகின்றார். அப்பெருமக்கட் கடியனாய்ச் சமரச ஞான சுத்த சன்மார்க்கத் தொண்டனாதல் வேண்டு மென்னும் விருப்புப் புலப்படத் தம்மை “அடியேன்” என்றும், அவ்விடத்துச் சுரக்கும் இன்பத்தில் மூழ்கிப் பாடி யாடிப் பரவசமாகும் விழைவை நயந்து, “அங்கமே குளிர நின்றனைப் பாடி யாடவும் இச்சை காண்” என்றும் எடுத்துரைக்கின்றார். சற்சங்கத்தில் பாடி மகிழ்தற்குறும் பொருள் இது வென்றற்கு “நின்றனை” எனக் குறிக்கின்றார்.

     இதனால், சமரச ஞான சுத்த சன்மார்க்கத்தின் இன்றியமையாமையும் செய்யத்தக்க பணியும் இவை யென விளங்கக் கூறியவாறாம்.

     (21)