3407.

     கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த
          கடுந்துயர் அச்சமா திகளைத்
     தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்
          தரவும்வன் புலைகொலை இரண்டும்
     ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
          உஞற்றவும் அம்பலந் தனிலே
     மருவிய புகழை வழுத்தவும் நின்னை
          வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்.

உரை:

     சிவபெருமானாகிய எந்தையே, அருளே யுருவாய்ப் பிறர்க்கு எய்திய மிக்க துன்பங்கள் அச்சங்கள் முதலியவற்றைத் தக்க போதுதவும் நின்னுடைய திருவருளைத் துணைக் கொண்டு நீக்கி அவர்கட்கு இன்பம் செய்யவும், பொல்லாத புலாலுண்டல் உயிர்களைக் கொல்லுதல் ஆகிய இரண்டையும் போக்கிய நன்னெறியும் உலகனைத்தும் ஒழுகப் பண்ணவும், பொன்னம்பலத்திற் பொருந்திய நினது திருப்புகழை எடுத்தோதவும் எனக்கு விழைவு மிக்குளது, காண். எ.று.

     தாம் அருளுள்ள முடையரானாலன்றிப் பிறர்பால் அருள் கூரவும் அவர்க் குற்ற இடுக்கண்களைப் போக்கவும் உள்ளம் எழாதாகலின், “கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துய ரச்சமாதிகளைத் தவிர்த்து” என்றும், “அவர்க்கு இன்பம் தர” என்றும் உரைக்கின்றார். “துன்பமும் துயரும் அடுத்து வந்து தாக்கும் இயல்பினவாதலின், “அடுத்த கருந்துயர் அச்சமாதிகள்” எனக் கூறுகின்றார். கடுமை - மிகுதிப் பொருட்டு. ஆதிகள் - முதலியவைகள். வேண்டுவார் வேண்டும் போது வேண்டியாங் குதவுவது திருவருளின் சிறப்பாதலின், “தருண நின்னருளால்” என விதந்து மொழிகின்றார். துன்பம் அச்ச முதலியவற்றின் காரணங்களைத் தடுத்துப் போக்குவதொருபாலாக இன்பம் செய்வது வேறாதலால், “தவிர்த்து அவர்க்கும் இன்பம் தரவும்” என மொழிகின்றார். புலை - ஈண்டுப் புலாலுணவின் மேற்று. வன்மைப் பண்பை மிகுவிக்கும் இயல்புடைமையால் “வன்புலை” எனக் கூறுகின்றார். உணற் பொருட்டு நிகழும் கொலையாதல் விளங்கப் “புலை கொலை இரண்டும்” என இணைத்து மொழிகின்றார். ஒருவுதல் - நீக்குதல். ஊனுண்ணா வியல்பு உலக மக்கள் எல்லார்பாலும் காணப்படுவ தின்மையால், “உலகெலாம் நடக்க” என்றும், அந்த அருளறம் பரவி நிலை பெறற்கு நன்மக்களின் முயற்சி இறப்பவும் பெரிதாதல் வேண்டுமாறு புலப்பட, “உஞற்றவும்” என்றும் இசைக்கின்றார். பிறர் துன்பம் துடைத்தலும், புலை கொலை தவிர்த்தலும் மெய்ப்பணியாக, மனத்தாலும் வாயாலும் செயற்குரிய பணியாதல் விளங்க, “அம்பலம் தனிலே மருவிய புகழை வழுத்தவும், நின்னை வாழ்த்தவும் இச்சை காண்” என விண்ணப்பிக்கின்றார்.

     இதனாற் புலை கொலை தவிர்க்கும் அருளற வேட்கை தெரிவித்தவாறாம்.

     (22)