3408.

     மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
          வருத்தத்தை ஒருசிறி தெனினும்
     கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
          கணமும்நான் சகித்திட மாட்டேன்
     எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்
          இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
     நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்
          நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

உரை:

     சிவபெருமானாகிய எந்தையே, இம்மண்ணுலகில் உயிர் வகைகள் படுகின்ற துன்பங்களைச் சிறிதளவேனும் கண்ணாற் காதிற் பிறர் சொல்லக் கேட்பினும் கணப் பொழுதும் நான் பொறுக்க மாட்டாதவனாவேன்; இதனை நினைந்து உழலுகின்ற எனக்கு நினது திருவருள் வலிமையால், யாரும் சொன்ன, போதெல்லாம் சொல்வோர் வருத்தங்களை யுடனே நீக்கத்தக்க வரம் ஒன்றை நின்பாற் பெறல் வேண்டும் என்பது எனக்கு விருப்பமாகும். எறு.

     மண்ணணுக்கள் நிறைந்தமை பற்றி நிலவுலகை “மண்ணுலகம்” எனக் கூறுகின்றார். நிலத்தில் மண்ணுடைப் பகுதியே மக்களினம் தொடக்கத்தில் தோன்றி நல்வாழ்க்கையில் தோன்றிய பகுதி யெனத் தொன்மை யாராய்ச்சியாளர் சொல்லுதலால், “மண்ணுலகதிலே” என எடுத்து மொழிகின்றார். மண்ணக வாழ்வு இன்பமும் விரவிய தெனினும் துன்பம் பெரிதாதல் பற்றி, “உயிர்கள் வருந்தும் வருத்தம்” என்று எடுத்தோதி, இன்பமும் இடும்பையும் தம்முள் பெருத்தும் சிறுத்தும் தோன்றுவவாயினும், சிறு துன்பம் தீப் போலச் சுட்டு வருத்துதலிற் சிறுமை யுறுதலின்மையின், “ஒருசிறிது எனினும்” எனவும், உயிர்கள் எய்தும் இன்ப துன்பக் காட்சிகள் கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரப்படும் தன்மையாவாதலால், “கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்” எனவும் இயம்புகின்றார். காண்பதிலும் கேட்பதில் கற்பனை புகுந்து விடுதலால் கேட்டலைப் பிற் கூறுகின்றார். துன்பங்களைக் காண்டலும் கேட்டலும் யாவர்க்கும் வருத்தம் தருவது பொதுவியல்பாயினும் எனக்குச் சிறப்பாக மிக்க மன நெகிழ்ச்சி தந்து என்னை மெலிவிக்கும் என்பாராய், “கணமும் நான் சகித்திட மாட்டேன்” என வுரைக்கின்றார். சிறு துன்பம் காணினும் பெரிதாகக் கருதி யவலமுறும் இயல்பினன் என்று தெரிவிப்பாராய், “எண்ணுறும் எனக்கு” என இயம்புகின்றார்., ஆகவே, பிறர் எய்தும் துன்பத்தைக் கேட்ட மாத்திரையே நீக்கக்கூடிய அருள் வலிமையை அருளுக என வேண்டுவாராய், “நின்னருள் வலத்தால் இசைத்தபோது இசைத்தபோதெல்லாம் நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல்வரம் தான் நல்குதல் எனக்கு இச்சை காண்” என மொழிகின்றார்.

     இதனால், பிறர் துன்பத்தைக் கேட்ட மாத்திரையே போக்க வல்ல வரம் பெற விழைத்தவாறாம்.

     (23)