13.பிள்ளைப் பெரு விண்ணப்பம்

    அஃதாவது, வடலூர் வள்ளற் பெருமானுடைய பிள்ளைமை யுள்ளத்துக் கள்ளமில்லாத எண்ணங்களையும் இன்ப துன்ப வுணர்வுகளையும் அச்ச அவல நினைவுகளையும் பிற தொடர்புடைய வுணர்ச்சிகளையும் பெருகிய அளவில் எடுத்தோதி மனம் தூயராக விண்ணப்பிப்பதாகும். மடிக்கனம் எறிந்து வழிக்கனம் குறைப்பாரைப் போல மனத் துணர்ச்சி களையுமிழந்து ஞான வாழ்வை எளிதாக்குவது பயன் என உணர்க.

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3410.

     தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது
          தந்தையே திருச்சிற்றம் பலத்தே
     கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்
          கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
     இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே
          எனக்கருள் புரிகநீ விரைந்தே
     இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன்
          இணைமலர்ப் பொன்னடி ஆணை.

உரை:

     ஒப்பற்ற பெரிய சோதியாகிய தலைவனே, எனக்குத் தந்தையே, திருச்சிற்றம்பலத்தே எழுந்தருளுகின்ற கனிவுடைய பெரிய கருணை யுருவாகிய கடவுளே,. அடியவனாகிய யான் எண்ணி யுரைக்கும் விண்ணப்பத்தை இனிமை மிகும் நின்னுடைய திருவுளத்தின்கண் ஏற்றுக் கொண்டு எனக்குத் திருவருளை விரைந்து செய்தல் வேண்டும்; இனி யான் சிறிது போதும் துயர் பொறுக்க மாட்டேன்; இது நின்னுடைய இரண்டாகிய மலர் போன்ற பொன்னார் திருவடி ஆணை. எ.று.

     தோற்றமும் கேடும் இல்லாமை அருட் சோதி யாண்டவற்கு இயல்பாதலால், “தனிப் பெருஞ் சோதித் தலைவனே” எனக் கூறுகின்றார். “துஞ்சு நாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்” (பாம்பு) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. தனிமை, தோற்றக் கேடின்மையால், ஒப்பற்ற தனித்தன்மை. சோதி யென்பதே அவர்க்குப் பெயராதலால், “சோதி” யென்றும், சுடர் விடுதலும் எங்கும் எப்பொருளிலும் குறைவற நிறைந்து உளனாதலும் அவற்குப் பெருமையாதல் விளங்க, “பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார். “சுடர் விட்டுளன் எங்கள் சோதி” என்பது திருப்பாசுரம். அறிவின் கண்ணும் செயலின் கண்ணும் தலைமையுற்று இயங்கும் தலைவர்கட்கு மேலாய்த் தலைமையுற்று அவர்களை இயக்கும் தலைவனாதல் பற்றித் “தலைவனே” எனக் கூறுகின்றார். சோதியாகிய தலைவனைத் “சோதித் தலைவனே” என்கின்றார். சோதியையுடைய தலைவனே என்பதும் ஒன்று. அகள நிலையில் ஞான வின்பவொளியாய் இலகும் பரசிவம், சகள நிலையில் அருளே திருமேனியாகக் கொண்டு கண்ணுதற் கடவுளாய்த் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் திறம் பற்றி, “திருச்சிற்றம்பலத்தே கனிப் பெருங் கருணைக் கடவுளே” என்று கூறுகின்றார். அளி பெருகி விளங்குதல் தோன்ற, “கனிப் பெருங் கருணை” என்கின்றார். கனிதல் - அளிமிகுதல். கனிந்த பழம் - அளிந்த பழம் எனப்படுவது வழக்கு. கூத்தப் பிரானாய்ச் சகள வுருக் கொண்டானாயினும் உண்மையகள நிலையில் அளப்பரும் தன்மையன் என்றற்குக் “கடவுள்” எனவும், சகளவுருவு திருவருள் தர வந்த தென்றற்குப் “பெருங் கருணைக் கடவுள்” எனவும் குறித் தருளுகின்றார். பெருங் கருணை - சிவ சத்தியாகிய திருவருள். திருவடியை மனத்திற் கொண்டுடையவன் யான் என்பாராய், “அடியனேன்” என அறிவிக்கின்றார். அம்மனத்தின்கண் எண்ணி யுரைக்கும் விண்ணப்பம் என்றற்கு, “கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம்” என மொழிகின்றார். இனிமைப் பண்பே யுருவாய திருவுள்ளமாதலின், இறைவன் திருவுளத்தை “இனிப்புறும் நினது திருவுளம்” எனவும், உயர் சொல் மரபு பற்றி, “திருவுளத் தடைத்” தெனவும் வேண்டுவது ஏற்றுச் செய்தருள்க என்பாராய், “எனக்கு விரைந்து அருள் புரிக” எனவும் இசைக்கின்றார். தாமதித்தல் கூடாது, துயர் பொறேன்; இஃது உண்மை என்பது புலப்பட, “இனிச் சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை” எனக் கூறுகின்றார்.

     இதனால், விண்ணப்பம் கேட்டருள்க என வேண்டியவாறாம்.

     (1)