3411.

     திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே
          திகழ்கின்ற தெய்வமே அன்பர்
     பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும்
          பண்பனே பரையிடப் பாகா
     பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற
          பேரருட் சோதியே எனக்கே
     உரியநல் தந்தை வள்ளலே அடியேன்
          உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.

உரை:

     விகாரமில்லாத பரம்பொருளே, தில்லைச் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளி விளங்குகின்ற கூத்தனாகிய தெய்வமே., அன்பராயினார் வருத்தமுறுந் தோறும் விரைந்து போந்தருளி நலம் செய்யும் பண்புடையவனே, உமாதேவியை இடப்பாகத்தே யுடையவனே, பெருமையையுடைய பொன்னம்பலத்தின்கண் ஞான நடனம் செய்கின்ற பெரிய அருட் சோதி யாண்டவனே, என்னுடைய உரிமைத் தந்தையே, வள்ளன்மையுடையவனே, உன் திருவடியை நெஞ்சில் உடைய யான் எண்ணுவதை யுரைக்கப் புகுகின்றேன்; இதனைக் கேட்டருள்க எ.று.

     திரிபு - விகாரம். பரம்பொருள் நிருவிகாரம் என ஆகமங்கள் ஓதுதலின், “திரிபிலாப் பொருளே” எனக் கூறுகின்றார். சகள வுரு தெய்வ வடிவமாதலின், திருச்சிற்றம்பலத்திற் காட்சி தந்தருளும் கூத்தப் பெருமானை, “திருச்சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே” என்று போற்றுகின்றார். தன்பால் அன்பு கொண்டவரது அன்பே வேண்டிய வேண்டியாங் கெய்துவித்து வளர்த்தல் சிவபிரானுக்கு இயல்பாதலால், “அன்பர் பரிவுறுந் தோறும் விரைந்து வந்தருளும் பண்பனே” எனப் புகல்கின்றார். பரிவு - வருத்தம். அருளுதல் - வருத்தத்தைப் போக்குதல். பண்பு - பொருள் தோன்றுங்கால் உடன் தோன்றி அஃது அழியுங்காறும் உடன் நிற்பது என்பது தருக்க நூன் முடிபு; அன்பர்க் கருள்வது பண்பாதலால் “விரைந்து வந்தருளும் பண்பனே” என விளம்புகின்றார். பரன் என்ற ஆண்பாற்குப் பெண்பாற் சொல் பரை என்பது. மேன்மை பொருந்திய உமாதேவியைப் “பரை” எனப் பகர்கின்றார். சிவ மூர்த்தம் உமையம்மையை இடப்பாகத்தே யுடையதாதலால், “பரையிடப் பாகா” என்று கூறுகின்றார். பொற் சபை - பொன்னம்பலம். அதனிற் பெரிய சபை உலகில் வேறின்மையின், பெரிய சபை - பெருமையை யுடைய சபை எனப் பொருள் படுவதாயிற்று. திருவருட் சிவஞானத்தை ஒள்ளிய பேரொளியாய் வழங்குவது பற்றி, “நடம் புரிகின்ற பேரருட் சோதியே” என்று பேசுகின்றார். அருளொளி பரப்பும் சோதி, “அருட் சோதி” எனப்படுவதாயிற்று. ஞான நிலையில் அருட் சோதியாகும் பரசிவம் கிரியை நிலையில் பெருங்கருணை யுருக் கோடலால், “அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை” என்பது நாளும் ஓதத் தகும் நன்மந்திரமாயிற்று. ஞான மருளும் உரிமை தந்தைக்காதல் பற்றி, “எனக்கே யுரிய தந்தையே” என வுரைக்கின்றார். பின்னர் உரைக்கலுறும் விண்ணப்பத்துக்குத் தோற்றுவாய் செய்வது விளங்க, “உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே” என மொழிகின்றார்.

     இதனால், தாம் செய்து கொள்ளும் விண்ணப்பத்துக்குத் தோற்றுவாய் செய்தவாறாம்.

     (2)