3412.

     தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத்
          தலைவனே திருச்சிற்றம் பலத்தே
     வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப
          வயங்கிய மெய்யின்ப வாழ்வே
     ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும்
          உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
     ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன்
          நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.

உரை:

     தன்னையல்லது வேறு எதனாலும் உயிர்கட்கு அசைவு உளதாக்காத தலைவனே, திருச்சிற்றம்பலத்தின்கண் சிதாகாசமன்றி வேறே யாதும் இல்லை என அறிந்தோர் எடுத்துரைக்க விளங்குகின்ற மெய்ம்மை யின்பமே நுகர்தற்கு அமைந்த வாழ்வானவனே, உடம்பேயன்றி உயிரும், உள்ளமும், உள்ளத்துள்ளுறும் உணர்வும் மகிழ்வுற இன்புறுத்தும் தெளிந்த அமுதாகியவனே, ஞான நாடகத்தைப் புரிந்தருளும் தந்தையே, அடியனாகிய யான் சொல்கின்ற இதனைக் கேட்டருள்க. எ.று.

     “தானலாது உலகமில்லை” (ஐயா) எனச் சான்றோர் உரைத்த அருள் மொழியை விளக்கும் கருத்தினால், “தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே” என வுரைக்கின்றார். “அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்ற தொன்மொழியில் அணுவென்றது உயிர் எனப் புலப்படுத்துகின்றாராகலின், “உயிர்க்கு அசைவிலாத் தலைவனே” என வுரைக்கின்றார். இறையும் - சிறிதும். உயிர்களின் அசைவு அசைவின்மைகட்குத் தலைமையியக்குநன் என்பார், “அசைவில்லாத் தலைவனே” எனத் தெரிவிக்கின்றார். உலகமில்லை யென்ற மெய்ம் மொழிக்கும் கருத்து இதுவே என்பதாம். சிவ ஞானிகள் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் கண்டின்புறுவது சிவானந்தப் பெருவெளியாகிய சிவம் நிலவும் ஞானவாசகம் எனப் பெரியோர் கூறுவது பற்றி, “திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறொன்றில்லை என உரைப்ப வழங்கிய வாழ்வே” என இயம்புகின்றார். தில்லையம்பலம் பரசிவத்தின் அகளத் திருமேனி என்ற மகுடாகமக் கருத்தைக் கொண்டு வான் என்றது சிதாகாச மாயிற்று. “சிதாகாசம் சிற்சபாப்ரபாவம்” என மகுடாகமம் கூறுகிற தென்பர். தில்லைக் கூத்தப் பிரானது அகளத்து ஆனந்தத் திருமேனி சகளத்தில் உமை கண்டு இன்புற விளங்கும் ஞானப் பேரின்ப நிலையமாதல் தோன்ற, “வயங்கிய மெய்யின்ப வாழ்வே” என விளம்புகின்றார். “அகளத்தில் ஆனந்தத் தானந்தியாயே, சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப் போக்குவதும் செய்தான்” (திருக்களிற்) எனத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் உரைப்பது காண்க. இன்பமில்லது வாழ்வாகாதலால், ஞானானந்த வாழ்வு மெய்யின்ப வாழ்வு எனக் காட்டப்படுகிறது. வாழ்வு தருவது வாழ் வெனப்படுகிறது. ஊனுடம்பின் உள்ளே யுயிரும், உயிர்க்கும் உள்ளமும் உள்ளத்தின் னுள்ளீடு உணர்வாகவும் நினைக்கப்படுதலின், “ஊனலால் உயிரும் உளமும் உள்ளுணர்வும்” எனக் காட்டி அதனுட் சிவ சிந்தனை நல்கும் சிவஞானத் தேனை, “உவப்புற இனிக்கும் தெள்ளமுதே” என வுரைக்கின்றார். உயிர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ வாழ்வு பெற வுதவுவது ஞான நாடகமும், நன்ஞானப் பேறின்றிப் பேதை வாழ்வு வாழ்ந்து மேன் மேலும் பிறப் பிறப்புக்களைப் பெற்றுழலச் செய்வது ஊன நாடகமுமாதலால், “ஞான நாடகம் செய் தந்தையே” என்றும், தமது விண்ணப்பத்துக்கு முன்னுரையாக, “அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே” என்றும் இயம்புகின்றார்.

     இதுவும் முன்னுரை கூறிற்றாம்.

     (3)