3413.

     என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை
          எழுமையும் காத்தருள் இறைவா
     என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே
          எனக்கறி வுணர்த்திய குருவே
     என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே
          எனக்கருள் புரிந்தமெய் இன்பே
     என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன்
          இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.

உரை:

     எனக்கு உயிர்க் குயிராகிய தெய்வமானவனே, எழுபிறப்பும் என்னை ஆண்டருள்கின்ற இறைவனே, என் மனத்துக்கு இன்பம் தருவதாகிய இனிய சுவையுடைய கனி போல்பவனே, எனக்கு நல்லுணர்வை அறிவுறுத்தும் ஆசிரியனே, என் அன்புக்குப் பொருளானவனே, திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளி எனக்கு மெய்யின்பம் அருள் புரிந்த பெருமானே, என்னைப் பெற்றெடுத்த தந்து போல்பவனே, அடியவனாகிய யான் எடுத்துரைக்கும் இவ்விண்ணப்பத்தைக் கேட்டருள்க. எ.று.

     உயிர்க்குயிராகும் தன்மை யுடைமை பற்றிச் சிவனை ”உயிர்க்குயிராம் தெய்வமே” எனச் சிறப்பிக்கின்றார். பிறப்பு வகை ஏழாதலால், “எழுமை” என்றும், பிறப்பு வகை யனைத்தையும் தோற்றுவித்தாளும் இறைவனாதலால், “எழுமையும் காத்தருள் இறைவா” என்றும் இயம்புகின்றார். எண்ணுவார் எண்ணுந் தோறும் இனிமைச் சுவை நல்குதலின், “என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே” எனவும், ஆன்ம வறிவினுள் அருளுடன் எழுந்தருளி அறிவு தந்து ஊக்குதலால் “எனக்கறிவு உணர்த்திய குருவே” எனவும், ஞான வொளி தருதலின், “என்னுடைய அன்பே” எனவும் கூறுகின்றார். தில்லைச் சிற்றம்பலத்தின்கண் சிவதரிசனம் தந்து சிந்தைக்குத் தெளிவு நல்குதலால், “திருச்சிற்றம்பலத்தே எனக்கருள் புரிந்த மெய்யின்பே” என்றும், தாம் மண்ணிற் பிறத்தற்குக் காரணமாயினமை விளங்க, “என்னை யீன்றெடுத்த தந்தையே” என்றும் உரைக்கின்றார்.

     இதுவே செய்யும் விண்ணப்பத்து முகமன் மொழிந்தவாறு.

     (4)