3414. கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே
கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி
வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத்
தெய்வமே திருவருட் சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே
தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
உரை: திருவருளுருவாகிய அருமையான அமுதாகிய பெருமானே, எனது உயிர்க்கு உயிராய் இலங்குபவனே, முதிர்ந்த திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் செங்கனி போல்பவனே, நால்வகைப்பட்ட வேதங்களின் மெய்ம்மைப் பொருளாய் விளங்குகின்ற அருள் வள்ளலே, அன்பர்களின் தெளிவார்ந்த வுள்ளத்தில் தோன்றியருளும் ஒப்பற்ற தலைமைத் தெய்வமே, திருவருளோடு கூடிய சிவ பரம்பொருளே, காலமறிந் துதவும் ஒருமைத் தந்தையே, நின் செவியின்கண் எனது இவ் விண்ணப்பத்தை ஏற்றருள்க. எ.று.
கருணை யுருவாயினும் அருமை புலப்பட, “ஆரமுதே” எனக் கூறுகின்றார். அவர்க்கஃது இயல்பாதலால் “உயிர்க்குயி” ரென்கின்றார். சிற்றம்பலத்தின்கண் செம்மை நிறத் திருமேனியுடன் காண்பார்க்கு இன்பம் தருதலால், “கனிந்த சிற்றம்பலக் கனியே” என இயம்புகின்றார். வருணம் - வகை; இருக்கு முதலாக நால்வகைப்படுதலின், “வருண மாமறை” என்கின்றார். மெய்ப் பொருள் - உண்மைப் பொருள். திருவருட் செல்வனாதல் பற்றி, “வள்ளல்” என ஓதுகின்றார். தெருள் - ஞானத் தெளிவு. தெளிந்த ஞானிகளின் திருவுள்ளம் தெய்வக் கோயிலெனப்படுவதலால், “தெருணிறை யுளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே” என்றும், அத்தெய்வம் இஃதெனக் காட்டற்குத் “திருவருட் சிவமே” என்றும் இசைக்கின்றார். தருணம் - ஈண்டுக் காலத்தின் மேற்று - ஒருமைத் தந்தை ஒரு தந்தை; இரண்டாகிய வினையை இருமை வினை என்பது போல.
இதுவும் முகமன் கூறியதாம். (5)
|