3415.

     என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த
          இறைவனே திருச்சிற்றம் பலத்தே
     என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங்
          கீகுதும் என்றஎன் குருவே
     என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி
          எனக்குளே விளங்குபேர் ஒளியே
     என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங்
          கேற்றருள் திருச்செவிக் கிதுவே.

உரை:

     என்னுடைய குற்றங்களைப் பொறுத்து என்னையும் ஆட்கொண்ட இறைவனே, தில்லைச் சிற்றம்பலத்தின்கண் எனக்கு அறிவு தந்து அஞ்சுதல் ஒழிக; உனக்கு வேண்டிய அருள் ஞானத்தை இங்கே நல்குவேம் என அறிவுறுத்தருளிய எனது ஞான குருவே; என்னை வேறாக நினையாமல் உண்மையை யுணர்த்தி என்னுடைய உள்ளத்தில் நின்று திகழும் அறவொளி யானவனே; என்னைப் பெற்றளித்த ஞானத் தந்தையே; இப்பொழுது என்னுடைய இவ்விண்ணப்பத்தை ஏற்றருள்க. எ.று.

     இளமைப் பருவத்துப் பொறி வழிச் சென்று பயின்றது பற்றி, “பிழை பொறுத்து” எனவும், பின்பு அறிவது அறியத் தொடங்கிய செயலை, “ஆண்டருளி” எனவும் இயம்புகின்றார். இருபோதினும் உடனிருந்தமை புலப்பட, “இறைவனே” என இயம்புகின்றார். தில்லையம்பலத் திருக்கூத்தின் கண் ஒரு கை அச்சம் தவிர்க என்றும், ஒரு கை திருவடியைக் காட்டித் திருவடி ஞானம் பெறுக என்றும் குறிப்பது கொண்டு, “என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல்லருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே” என இசைக்கின்றார். ஞானப் பேற்றுக்கு ஆகாதவ னெனக் கருதாமல் மனத்தின்கண் சிவஞானம் விளங்கச் செய்தமைக்கு வியந்து, “என்னை வேறு எண்ணாது உள்ளத்தே யுணர்த்தி எனக்குள் விளங்கு பேரொளியே” எனவும், சகத்திற் பிறப்பித்து அறிவின்பம் பெறுவிப்பது பற்றி, “என்னை யீன்றளித்த தந்தையே” எனவும் தெரிவிக்கின்றார்.

     இதனாலும் விண்ணப்பத்துக்கு முகமன் மொழிந்தவாறாம்.

     (6)