3416. இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென்
இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு
விளங்கிட விளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன்
கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே
அடைத்தருள் என்மொழி இதுவே.
உரை: இரும்பு போன்ற மனமுடையேனாகவும் என் குற்றங்களைப் பொறுத்தருளி என் மனத்தின்கண் எழுந்தருளி யிருந்து அறிவு விரும்பும் மெய்ம்மைப் பொருளாகிய சிவ பரத்துவத்தை நன்கு விளங்குமாறு என்னுட் கலந்து காட்டிக் கரும்பின் சாறும், முக்கனிப் பிழிவும் ஆன்பாலாகிய அமுதொடு தேன் பெய்து கலந்தாற் போல இனிக்கின்ற பெருமானே, அம்பலத்தில் ஆடுகின்ற அரிய பெரிய சோதி யுருவாகிய அப்பனே, என் விண்ணப்பத்தைத் திருவுளத்தில் ஏற்றருள்க. எ.று.
எளிதில் உருகாமை பற்றி, “இரும்புநேர் மனத்தேன்” என்றும், அதனால், உளதாய பிழை பொறுத்தமை யுணர்ந்து “பிழை யெலாம் பொறுத்து” என்றும், மன வுணர்வில் விளங்குதலால் “இதயத்தில் எழுந்திருந்தருளி” என்றும், இருந்த பரம்பொருள் செய்தது கூறுவாராய், “விரும்பு மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி” என்றும் இயம்புகின்றார். சிவ பரத்துவத்தை விரும்புவது உண்மையறிவாதலால் “விரும்பு மெய்ப்பொருள்” என விசேடிக்கின்றார். தன்னியல் - பரமாம் தன்மை. பரத்துவத்தை விளக்கிய பெருமான் பரத்துவ ஞானானுபவத்தை உணர்விற் கலந்திருந்து நுகர்வித்தமையை, “கரும்பு முக்கனி பால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய்” என இசைக்கின்றார். பொது - திருச்சிற்றம்பலம். அரும் பெருஞ் சோதிக்கண் அருமை, எய்துதற் கருமை; பெருமை - அளப்பருந்தன்மை.
இதனால் விண்ணப்பத்துக்கு முகமன் மொழிந்தவாறாம். (7)
|