3417. மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி
மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக்
கொடுத்துளே விளக்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம்
பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது
தந்தையே கேட்கஎன் மொழியே.
உரை: கேவலத்தில் மலத்திற் கிடந்த என்னை எடுத்து சகலத்தில் மக்களினத்திற் புகுத்தி அறிவுடையோர் கூட்டத்தில் பயிலுகின்ற தகுதியும் அளித்து என் சிந்தைக்குள்ளே இருந்தருளும் சற்குருவே, ஞான வன்மையில் தங்கி, சிற்றம்பலத்திலும் பொன்னம்பலத்திலும் மெய்யன்பரது அறிவாகிய கோயிலிலும் வீற்றிருந்தருளும் தலைவனே, எனக்குத் தந்தையாகிய பெருமானே, என் விண்ணப்பத்தைக் கேட்டருள்க. எ.று.
தொடக்கத்தில் ஆன்மாக்கள் அனாதி சம்பந்தமான ஆணவ மலவிருளில் அழுந்திக் கிடப்பது பற்றி, “மலத்திலே கிடந்தேன்” என வுரைக்கின்றார். இதனைச் சிவாகம சித்தாந்தம், “கேவல நிலை” என வுரைக்கின்றன. இந் நிலையில் பக்குவமுற்ற ஆன்மாக்களை இறைவன் உலகில் உடல் கொடுத்துப் பிறப்பிப்பன்; அந்த நிலை சகச நிலை யெனப்படும். இதனுட் புல் பூடு முதல் தேவர் ஈறாக வுள்ள அனைத்தும் அடங்கும்; இதனை “மன்னிய வடிவளித்து” எனக் கூறுகின்றார். வடிவுகள் எண்ணிறந்தனவாகலின், “மன்னிய வடிவு” என்கின்றார். மன் -பெருமை. அறிஞர் குலம் - மக்களினத்து நன்மக்கள் கூட்டம். நற்சார்பில் தோன்றுதல் தவத்தால் விளைவதாகலின், “அறிஞர் குலத்திலே பயிலும் தரம் கொடுத்து” என்று கூறுகின்றார். அறிஞர் குலம் திருவருள் ஞானமுற்றுச் சிவ சிந்தனையில் தோய்ந்திருக்கும் சிறப்புடையதாகலின், “உளே விளங்கு சற்குருவே” என வுரைக்கின்றார். பலம் - ஞான வன்மை. சிற்றம்பலம் - சிதம்பரம் என்று வழங்குகிறது. சிதம்பரம் சித்து அம்பரம் எனப் பிரிந்து, ஞானாகாசம், ஞான சபை என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. பொன் வேய்ந்த சபை - பொன்னம்பலம். அன்பர் அறிவாம் தலம் என்பது ஞான சபையுமாகும்.
இதுவும் விண்ணப்பத்துக்கு முகம னுரையாகும். (8)
|