3418. விண்டபோ தகரும் அறிவரும் பொருளே
மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர்
சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக்
குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம்
கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
உரை: நுண்பொருள்களை விளக்க வல்ல ஆசிரியர்களாலும் அறிந்துரைக்க அரிதாகிய நுண்பொருளாகியவனே, மெய்ம்மையும் தலைமையும் உடையவனே, இவ்வுலகில் நினக்குத் தொண்டானாகிய என்னைச் சார்ந்தவர்களும், நண்பர்களும், சூழ்ந்திருப்பவரும், உறவினரும், தாயரும், உடன் பிறந்தோரும், அயலிருப்பவரும் என இங்கே தொடர்புக் குறிப்புடையவர் முகங்களில் சோர்வுக் குறிகளைக் காணும் போதெல்லாம் அறிவு மயங்கி நான் மனம் கலங்கிய கலக்கத்தை நீ அறிவா யன்றோ. எ.று.
விள்ளல் - உரைத்தல்; பலரும் இனிதின் உணர்ந்துரைக்க மாட்டாத நுண்மைப் பொருள்களைத் திண்ணிதின் உணர்ந்து தெளிவுற எடுத்துரைக்கும் ஞானவான்களை “விண்ட போதகர்” என வுரைக்கின்றார். யாவரும் பயில நிலவும் பசுபாச அறிவுகட்கு எட்டாமை பற்றி, “அறிவரும் பொருளே” எனவும், கருவி கரணக் காட்சிகட்கு எய்தாவிடினும் உண்மை யுணர்வுக்குக் காட்சிப் படுதல் விளங்க, “மெய்யனே” எனவும், எல்லாப் பொருள்கட்கும் தலைமை நலம் உடைமையின், “ஐயனே” எனவும் புகழ்கின்றார். தொண்டன் - சரியை முதலிய தொண்டுகளைச் செய்பவன். அடுத்தவர் - யாதானுமொரு காரணம் பற்றிச் சார்பவர். சூழ்ந்தவர் - சூழ விருப்பவர். ஈன்ற தாய் முதல் தாயர் பலராதலின், தாயர் எனப் பன்மையிற் கூறுகின்றார். உடன் பிறந்தோரை வடமொழியிற் “சகோதரர்” என்பர். அயலவர் - அயல் வீடுகளில் உறைபவர். உடலுறு நோயும் மனநோயும் முகத்திற் சோர்வைப் புலப்படுத்துவனவாதலால், “முகங்களில் இளைப்பைக் கண்டபோது” என இயம்புகின்றார். எளிதில் உருகும் மனத்தினராதல் விளங்க, “கலங்கிய கலக்கம் நீயறிவாய்” எனத் தெரிவிக்கின்றார். மனம் கலங்கும் போது உள்ளுறும் அறிவும் ஒளி குன்றி மயங்குதல் பற்றி “மயங்கி யுள்ளம் கலங்கிய கலக்கம்” எனக் குறிக்கின்றார். நெஞ்சின் கண்ணது உள்ளம் என்றும், உள்ளத்தில் உள்ளது ஆன்ம அறிவு என்றும் தமிழ்ச் சான்றோர் கூறுவர். அவர் நெறியில் வந்தவர் நம் வடலூர் வள்ளல் என்பது உணர்க.
இதனால், அடுத்தவர் நேயர் முதலியோர்க் குளதாகும் இளைப்புக் கண்ட போதெய்திய கலக்கத்தைத் தெரிவித்தவாறாம். (9)
|