3419. சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது
தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர்
அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்
மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம்
பதைத்ததுன் உளம்அறி யாதே.
உரை: சிறப்பு மிக்க ஞான சபையில் எழுந்தருளும் என் தந்தையே, எனக்குத் தெய்வமே, யான் பெற விரும்பும் சிறப்புக்குப் பொருளாகியவனே, பாசத்தாற் பிணிக்கப்பட்ட இவ்வுலகில் தாயரும், துணைவரும், என்னை யடைந்தவரும், உறவினரும், வணங்கும் தெய்வங்களும், வெறுத்து நோக்கும் அயலவரும் பசி நோயாலும் வேறு பிணிகளாலும் மேனியும் மனமும் வெய்துற்று வருந்திய வருத்தத்தைக் கண்ட போதெல்லாம் என் நெஞ்சம் அஞ்சிப் பதைத்த திறத்தை உன் திருவுள்ளம் நன்கு அறியுமே. எ.று.
உலகியல் மக்கள் கூடும் சபை, வேந்தர் கூடும் சபை ஆகிய சபைகள் பலவற்றினும் சிவஞானத்தாற் சிறந்தமை பற்றி, சிவபிரானது திருவருள் ஞான சபைக்குத் தலைவனாதலின், “சீர்த்த சிற்சபை யென் அப்பனே” என்கின்றார். சபைத் தலைவற்கும் தமக்குமுள்ள தொடர்புணர்த்தற்கு, “என் அப்பனே” எனக் குறிக்கின்றார். தாம் வழிபடும் தெய்வமும் அத்தலைவனே என்பார், “எனது தெய்வமே” என்றும், தாம் பிறந்து வளர்ந்து அறிவறிந்து பெறும் சிறப்புக்கள் பலவற்றிற்கும் பொருளாவது அப் பெருமானது திருவருளாதலால், “என் பெருஞ் சிறப்பே” என்றும் இயம்புகின்றார். துன்பங்கள் பல தொடர்ந்து தாக்கினும் நீங்காதவாறு உயிர்களைப் பிணிக்கும் பெருமையுடைமை பற்றி, “ஆர்த்த இவ்வுலகு” எனக் கூறுகின்றார். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடல்” (நாவுக்) எனச் சேக்கிழாரடிகள் தெரிவிப்பது காண்க. ஆர்க்கும் திறம் இவை யெனக் காட்டற்கு “அம்மையர் துணைவர் என்பன முதல் நேயர்”களையும் சிலர் வெகுண்டு நோக்கி. வேறு படுத்தற்கும் பாசமேயடிப்படையாதலின், அவரையும் உளப்படுத்தி, “வேர்த்து மற்றயலார்” என விளம்புகின்றார். அயலார் என்பத னீற்றில் ஆக்க வினையை விரித்து அயலாராயினாரென நிறுத்தி வேர்த்தென்னும் வினையெச்சத்தை முடிக்க. பசி நோயும் பிற நோய்களும் தோன்றிய போது உயிர்பாசம் மீதூர்ந்து பிறவற்றை மாற்றி விடுதல் பற்றி, “பசியினால் பிணியால் மெய்யுளம் வெதும்பிய வெதுப்பை” என எடுத்து மொழிகின்றார். பசியால் மெய்யும், பிணியால் உளமும் நோயுற்று வருந்துமென அறிக. அவ்வருத்தத்தைக் கண்டு தமது மனம் பொறாது வருந்திய இயல்பை, என்னுள் இருந்து நோக்கும் நீ நன்கு அறிவாய் எனத் தெரிவிக்கின்றாராகலின், “எனதுள்ளம் பதைத்தது உன்னுளம் அறியாதோ” என உரைக்கின்றார். தன்னொத்த உயிர் வருந்தக் கண்டதும் தான் வருந்துவது உயிர்க்கமையும் திருந்திய பண்பாயினும் அதன் நிகழ்ச்சி நீ யறிந்த தன்றோ என்பாராய், “என் உள்ளம் பயந்து பதைத்தது உன்னுளம் அறியாதோ” என மொழிகின்றார்.
இதனால், பிறர் உறும் பசிப் பிணியாகிய வருத்தம் கண்டு அஞ்சிப் பதைத்தமை விண்ணப்பித்தவாறாம். (10)
|