3420.

     பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும்
          பரமனே அரும்பெரும் பொருளே
     தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச்
          சங்கடப் பாவியால் வருந்தி
     நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர்
          நண்பன்என் றவரவர் குறைகள்
     உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம்
          உடைந்ததுன் உளம்அறி யாதோ.

உரை:

     திருவருள் வெளியில் திருக்கூத்தாடும் பரம்பொருளே, எய்துதற்கரிய பெரிய பொருளே, நிலவுலகில் நடைபெறுகின்ற மக்கள் வாழ்வில் வறுமையாகிய தீங்கு புரியும் பாவியினால் துன்புற்று முதியவரும் இளைவருமாகிய பிறரும் என்னை நண்பனென்று கருதித் தத்தமக்குள்ள குறைகளை எடுத்துச் சொல்லக் கேட்டபோதெல்லாம் என் மனநிலை கலங்கி யுருகியது தேவரீர் அறிந்த தன்றோ. எ.று.

     சுத்த மாயா மண்டலத்துப் பரமாகிய சிவவெளிக்குக் கீழாய் கிரியா வடிவில் நிலவும் சத்தி வெளி. பரையாகிய திருவருள் வெளியாகும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தொழிற் சத்தியைத் தூண்டி வாழ்விப்பது பற்றி, “பரைத் தனிவெளியில் நடம் புரிந்தருளும் பரமனே” என்று போற்றுகின்றார் பரை - சிவசத்தி; இதனைத் திருவருட் சத்தி என்பது வழக்கம். ஞானம் இச்சை என்பவற்றின் கலப்பின்றித் தூய கிரியை வடிவாய் நிலவுதல் பற்றி, அருள்வெளி, “பரைத் தனிவெளி” எனப்படுகிறது. பரை வெளியில் திருக்கூத் தியற்றினும் அதன் மேலதாகிய சிவவெளியில் ஞானமே வடிவாய் விளங்குதலால், “பரமனே” எனப் பரவுகின்றார். சுத்த மாயையின் மத்தகத்து விளங்குதலின், “அரும் பெரும் பொருளே” என வுரைக்கின்றார். தரைத் தலம் - நில வுலகம்; மக்கள் பிறந்து வாழ்ந்து பயன் நுகர்ந்து ஒடுங்கும் இடமாதலால் “தரைத் தலம்” எனக் குறிக்கின்றார். வறுமை - இன்மை. “இன்மை யென வொருபாவி” (குறள்) எனச் சான்றோர் வழங்குதலால் “வறுமைச் சங்கடப் பாவி” என மொழிகின்றார். சங்கடப் பாவி - இடுக்கண் செய்யும் பாவி. பாவத்தைச் செய்வதும் செய்விப்பதும் பற்றி, இன்மையைப் பாவி எனக் கூறுகின்றார். வறுமை மிகுதி அவலக் கவலைகள் யுறுவித்து இளமை நிரம்பு முன்பே நரை திரைகளை எய்துவித்தலின், “நரைத்தவர்” என்றும், வறுமைச் சங்கடத்துக்கு இரையாகி மெலியும் இளம் பருவத்தினரை “இளைஞர் முதலினோர்” என்றும் இயம்புகின்றார். நண்பன் - அருகடைந்து சொல்வார் சொல்வது கேட்கும் பண்புடையவன். குறை - இன்றியமையாதவை. குறை யளவு மிக்க விடத்தே நண்பர்களிடத்தே யுரைக்கப்படும்; உரைப்பது குறை நீங்குதற்கும் வருத்தம் ஆறுதற்கும் ஏதுவாதலால், “அவரவர் குறையை யுரைத்த போது” எனக் கூறுகின்றார். குறைகள் கேட்போர் உள்ளத்தின் திண்மையைக் கரைத்து உருக்குதல் விளங்க, “உரைத்த போதெல்லாம் நடுங்கி என்னுள்ளம் உடைந்தது” எனவும், உள்ளத்தின்கண் உடனிருந்தறிகின்றானாகலின், “உன் உள்ளம் அறிந்ததுவே” எனவும் எடுத்தோதுகின்றார்.

     இதனால், உரைப்பார் உரைக்கும் குறை கேட்டு உள்ளம் உடைந்தது தெரிவித்தவாறாம்.

     (11)