3421.

     அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென்
          ஐயனே இவ்வுல கதிலே
     பொன்னையே உடையார் வறியவர் மடவார்
          புகலும்ஆ டவர்இவர் களுக்குள்
     தன்னையே அறியாப் பிணியினால் ஆவி
          தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
     சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த
          சோபத்தை நீஅறி யாயோ.

உரை:

     உயிர்த் தொகைகட்கு அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் தலைவனே, இவ்வுலகத்திற் பொன்னையே மிகுதியாக வுடையவரும், இல்லாத வறியவரும், இள மகளிர் விரும்பும் ஆடவுரும் ஆகிய இவர்கள் ஒவ்வொருவரும் தன்னையறியாமல் பிணி வாய்ப்பட்டுத் தளர்ச்சி யுறுகின்றார்கள்; அவர்கள் தமது நோயை எடுத்துச் சொல்லிய போதுகளில் அஞ்சி நான் அடைந்த மெலிவை நீ நன்கு அறிவாய். எ.று.

     அன்னை போல் உடல் தந்து ஓம்பியும் அப்பனைப் போல் அறிவு தந்து ஆதரித்தும் அளிப்பதனால், இறைவனை “அன்னையே” என்றும், “அப்பா” என்றும் போற்றுகின்றார். திருச்சிற்றம்பலத்தில் ஆடலரசாய் விளங்குதலால், “திருச்சிற்றம்பலத்து என் ஐயனே” எனப் பராவுகின்றார். தேவருலகும் பிறவும் கண்டறியாமையால் வாழ்வுற் றறியும் மண்ணுலகை, “இவ்வுல கதிலே” எனச் சுட்டி யுரைக்கின்றார். உலக வாழ்வுக்கு உறுதி நல்குவது பொன்னாகிய பொருளே எனக் கருதி ஈட்டிக் காத்தோம்புவது விளங்க, செல்வர்களைப் “பொன்னையே யுடையார்” எனப் புகல்கின்றார். அது செய்ய மாட்டாமையால் வறியராயினாரை “வறியவர்” என்கின்றார். மடவார் - இளமகளிர்; காம வேட்கையே முந்துற்று நிற்கும் உள்ளமுடைய இளமை மகளிரை, “மடவார்” எனவும், அவர் விரும்புவது கண்ணும் கருத்தும் கவர்க்கும் கட்டாண்மையுடைய ஆண்மக்களை யாதலால், “மடவார் புகலும் ஆடவர்” எனவும் எடுத்தோதுகின்றார். செல்வரும் ஆடவரும் நோயின்றி இன்பமே நுகர்தற் குரியராயினும், வந்த வாயிலறியாமையால் பிணியுற்று வருந்துகின்றமை புலப்பட, “இவர்களுக்குள் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார்” என இயம்புகின்றார். உடற் புறத்தே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வாழும் உயிருடையவும் இல்லனவுமாகிய உயிர்களாலும் உடற்குள் தெரியாமல் உளவாகும் ஊறுகளாலும், உயிர்களாலும், பிணி வகைகள் தோன்றுதல் பற்றி, “அறியாப் பிணியினால்” எனவும், ஊக்கமின்றிச் சோர்வது இறப்பினும் துன்பம் மிக வுடையதாகலின், “ஆவி தளர்கின்றார்” எனவும் உரைக்கின்றார். பிணி செய்யும் கேட்டினை அவர்கள் எடுத்துரைக்கக் கேட்குங்கால், நமக்கும் இதுதானே நிலை என்ற உணர்வு தோன்றி உள்ளத்தில் அச்சம் எழுந்து அலைத்தலால், “தருணம் ஈதெனவே சொன்ன போதெல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறிவாயே” என்று இசைக்கின்றார். தருணம் - நோய் வருத்தும் சமயம். சோபம் - மனத் தளர்ச்சியினால் மேனியில் விளங்கித் தோன்றும் பொற்பின்மை.

     இதனால் காணாது வருத்தும் நோய்த் திறம் எடுத்தோதியவாறாம்.

     (12)