3422. உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும்
ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபேர் உலகில் அம்மஇவ் வீதி
மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என்
றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம்
குலைநடுங் கியதறிந் திலையோ.
உரை: உண்ணுந் தோறும் இனிக்கும் அமுது போல இனிமை விளைவிக்கும் ஒப்பற்ற பெருமானே, ஞான சபையை யுடையவனே, பெருமையாகப் பேசப்படும் உலகில், இத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் உடலோடு ஒன்றிய உயிர் துறந்தார் என்று அலறி யழுகின்றார்கள் எனச் சிலர் ஒருவரோ டொருவர் பேசிக்கொள்வது கேட்டு எனது உள்ளமும் உடம்பும் நடுங்கியதை நீ அறிந்துள்ளாய் அல்லவா? எ.று.
உண்டற் கினிதாகலின் அமுதம் உண்ணுந் தோறும் இனிமை தரும் இயல்புடைமை பற்றி, “உண்ட தோறெல்லாம் அமுதென இனிக்கும்” எனவும், அவ்வமுதே போல நினைக்குந் தோறும் இனிமை சுரப்பது பற்றி, “அமுதென இனிக்கும் ஒருவனே” எனவும், அப்பெருமான் ஞானசபைத் தலைவனாதல் பற்றி, “சிற்சபை யுடையாய்” எனவும் இயம்புகின்றார். “நினைத்தொறும் காண்தொறும் பேசுந் தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப் புடையான்” (கோத்தும்பி) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. நுகர்ந்த பின்னன்றி இனிமைச் சுவை யுணரப் படாமை பற்றி, “உண்டதோறு” என இறந்த காலத்தால் இயம்புகின்றார். ஒருவன் என்பதும் சிவனுக்குப் பெயராதலின், “ஒருவனே” என்று கூறுகின்றார். “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” (அண்டப்) என்பது திருவாசகம். சிற்சபை - ஞானசபை. உலகம் பெரிதெனச் சான்றோர் கூறுதலின், “விண்டபேருலகில்” என விளம்புகின்றார். “பெரிதே யுலகம் பேணுநர் பலரே”
(புறம்) எனச் சங்கச் சான்றோர் உரைப்ப தறிக. வேறு வேறாகப் பிரித்துக் காணாதபடி ஒன்றி யிருத்தலால், “ஒன்றுயிர்” எனக் கூறுகின்றார். ஒன்றுயிர், ஒண்டுயிர் என மருவிற்று. இறந்தார் செய்தியைப் பிறர் தம்மிற் பேசிக் கொண்டது தம் காதில் வீழ்ந்து வருத்திய திறத்தைக் “கேட்டு எனது உள்ளம் குலை நடுங்கியது” எனவும், அது என்னுள் இருக்கும் நீ அறிந்த தன்றோ என்றற்கு “அறிந்திலையோ” எனவும் எடுத்துரைக்கின்றார். குலை, ஆகு பெயராய் உடல் மேல் நிற்கிறது.
இதனாற் நேரிற் காணா தொழியினும் இறப்புத் தமக்கு அச்சம் விளைவித்தலை யுரைத்தவாறாம். (13)
|