3423. காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக்
கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர்
வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத
அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப்
பதைத்ததுன் உளம்அறி யாதோ.
உரை: காவி மலர் போன்ற கண்களை யுடைய உமாதேவியை ஒரு கூறாக வுடையவனே, தலைமை சான்ற கடவுளே, ஞான சபையின்கண் எழுந்தருளும் ஒளியாகியவனே, இந்த நாட்டில் தெரு முதலியவற்றில் மனிதர் இறந்தது காரணமாக உறவினர் கூவியழுத அழுகுரல் கேட்ட போதெல்லாம் பாவியாகிய என் மனம் பகீரென அதிர்ந்து நடுங்கித் துடித்தது நினது திருவுள்ளம் தெரிந்த தன்றோ. எ.று.
காவி - நீலோற்பலம் என்னும் பூ. மகளிர் கண்கட்கு இந் நீல மலரை உவமம் கூறுவது மரபாகலின், உமாதேவியைக்”காவி நேர் கண்ணாள்” என்று குறிக்கின்றார். தேவர்கட் கெல்லாம் மாதேவன் எனச் சிவபெருமானைப் பெரியோர் கூறுதலால், “தலைமைக் கடவுளே” என்று போற்று
கின்றார். “யாதோர் தேவர் எனப்படுவார்க் கெலாம் மாதேவனல்லால் தேவர் மற்றில்லையே”
(ஆதிபுரா) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. ஒளி யுருவின னென்பது பற்றிச் சிவனைச் “சிற்சபை தனிலே மேவிய ஒளியே” எனப் புகழ்கின்றார். “சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. காடு மலை முதலிய நாடுகளையும் உலகம் என்னும் வழக்குப் பற்றி, “இவ்வுலகு” எனக் குறிக்கின்றார். ஊர் வீதிகளிலே யன்றி வீடுகளிலும் மனிதர் இறத்தல் உண்டாதலால், “வீதி யாதிகளில்” என விளம்புகின்றார். ஆவி -உயிர். ஒருவர் இறந்தவிடத்து உறவினர் அழுது புலம்புவது இயல்பாதல் பற்றி, “உறவினர் அழுத அழுகுரல் கேட்டு” எனவும், அது கேட்டுத் தாம் எய்திய துன்பத்தைப் “பாவியேன் உள்ளம் பகீரென நடுங்கிப் பதைத்தது” எனவும் விளம்புகின்றார்.
இதனால், இறப்புச் செய்தியால் உள்ளம் எய்திய துன்பநிலை கூறியவாறாம். (14)
|