3424.

     நாதனே என்னை நம்பிய மாந்தர்
          ஞாலத்தில் பிணிபல அடைந்தே
     ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன்
          எய்திய சோபமும் இளைப்பும்
     ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும்
          உற்றபேர் ஏக்கமா திகளும்
     தீதனேன் இன்று நினைத்திட உள்ளம்
          திடுக்கிடல் நீஅறிந் திலையோ.

உரை:

     தலைவனாகிய சிவபிரானே, இவ்வுலகில் என்னை விரும்பிய மக்கள் நோய்கள் பலவுற்றுத் துன்ப மடைவது கண்டு நினக்கு அடியவனாகிய யான் அடைந்த வருத்தத்தையும் மேனி யிளைப்பையும் கடலலை போல் பொருந்திய மனநடுக்கத்தையும் திகைப்பையும் மிக்க பெரிய ஏக்கம் முதலியவற்றையும் கடையவனாகிய நான் இப்பொழுது நினைக்கினும் திடுக்கிட்டு வருந்தும் திறத்தை நீ அறிவாயன்றோ. எ.று.

     உலகுயிரனைத்திற்கும் தலைவனாதலால், சிவனை “நாதனே” என்று கூறுகின்றார். நம்புதல் - விரும்புதல். விரும்புகின்றவர் இளைஞரும் முதியருமாகப் பலராதல் தோன்ற, “மாந்தர்” எனப் பொதுப்பட மொழிகின்றார். ஏதம் - துன்பம். அன்பு செய்து தொடர்பு கொண்டவராதலின், அவர்கட்குற்ற துன்பம் தம்மைச் சுடுவது பற்றி வருத்தமும் மெலிவும் எய்திய நிகழ்ச்சியை, “நம்பிய மாந்தர் ஏதம் நேர்ந்திடக் கண்டு அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்” என எடுத்துரைக்கின்றார். ஓதம் - கடலலை. இன்பமும் துன்பமுமாகிய நினைவுகளால் எப்போதும் அலைக்கப்படுவது பற்றி, “ஓத நேர் உள்ளம்” என்று கூறுகின்றார். சோபம் - வருத்தம். அன்பர்கள் உற்ற துன்பம் எளிதிற் போக்கக் கூடியதாயின் மனத்தின் கண் குளிர்ச்சியும், போக்க மாட்டாத வலி மிக்கதாயின் தளர்ச்சியும் தருதலின், “உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்க மாதிகளும்” தோன்றுதல் பற்றி அவற்றை நினைந்து “இன்று நினைத்திட” எனவும், நினைக்கும் நெஞ்சு திடுக்கிட்டுப் பதைப்பது குறித்து, “உள்ளம் திடுக்கிடல் நீ யறிந்திலையே” எனவும் இறைவன்பால் முறையிடுகின்றார்.

     இதனால், தம்மை நயந்து சூழ்ந்தவர்க் குற்ற துன்பம்பற்றித் தமது நெஞ்சு திடுக்கிட்டு வருந்திய திறத்தை விளம்பியவாறாம்.

     (15)