3425.

     கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்
          கண்ணுதற் கடவுளே என்னைப்
     பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்
          பெருகிய பழக்கமிக் குடையோர்
     மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து
          மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
     உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி
          உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

உரை:

     கற்றுணர்ந்தவர் மனத்தின்கண் கரும்பு போல் இனிமை நல்கும் சிவபெருமானே, என்னைப் பெற்றெடுத்து வளர்த்த தாயும், நண்பரும், உறவினரும், துணைவரும், மிகவும் பழகியவரும் பிறரும் இவ்வுலகில் தனித் தனியே பிரிந்து இறந்த போதெல்லாம் அவரது இறப்பை நான் உற்று நினைக்குந் தோறும் மனத் திண்மை கலங்கினேன்; இப்போதும் கலங்குகின்றேன்; இதனை நீ அறிவாயன்றோ. எ.று.

     “கற்றவர் உண்ணும் கனி” என்று சான்றோர் கூறுவதைத் தாமும் உணர்ந்து இன்புறுகின்றாராதலின், “கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கடவுளே” எனப் பராவுகின்றார். நெற்றியிற் கண்ணுடைய பெருமானாதல் பற்றிச் சிவனைக் “கண்ணுதற் கடவுள்” என்று சிறப்பிக்கின்றார். துணைவர் - ஈண்டு உடன் பிறந்தார் மேற்று. பலகாலும் கண்டு பயின்றவர்களைப் “பெருகி பழக்க மிக்குடையோர்” என்று குறிக்கின்றார். இறப்பவர் தனித்தே உயிர் பிரிதலால், “தனித்தனிப் பிரிந்து மறைந்திட்ட தோறும்” எனக் கூறுகின்றார். இறந்தவரை எண்ணும் போது அவர் உயிரோடு இருந்தபோது செய்த நற்செயல்கள் நெஞ்சின்கண் தோன்றி இன்பம் செய்து அவர் பிரிவால் அவற்றைத் தொடர்ந்து பெற மாட்டாமைக்கு மனம் வலியிழந்து சோர்வுறுதலால் “அப் பிரிவை உற்று நான் நினைக்குந் தோறும் உள்நடுங்கி யுடைந்தனன் உடைகின்றேன்” என வுரைக்கின்றார். இந்நினைவுகளை வாய்விட் டுரைத்த போது, மனம் பற்றொழிந்து இறைவன் திருவருளில் இனிது தோய்தலின், இந்நினைவுகளை எடுத்துரைக்கின்றார்.

     இதனால், இறந்தாரை நினைந்து வருந்தும் மனத்தைத் தூய்மை செய்து கொள்ளுமாறு காணலாம்.

     (16)