3426. என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும்
எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர் உயிர்ப் பிரிவை
நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும்
அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும்
எய்திடும் துயரும்நீ அறிவாய்.
உரை: எப்பொழுதும் திருவருள் ஞானத்தை நயந்து உறைபவர் அனைவர்க்கும் ஞான வின்பத்தையே நல்கும் எந்தையாகிய சிவனே, என்னையே நினைந்து எனக்கு நலத்தையே எண்ணி யுரைத்த நல்லவர் இறந்தாராக, அவரது இறப்பை நாய் போன்ற யான் கண்ணிற் கண்டும் பிறர் சொல்லக் கேட்டும் துயர் மிகுந்து அப்பொழுது நான் அடைந்த மன நடுக்கமும் துன்பமும் எண்ணினால் அதற்கு ஓர் அளவேயில்லை; என்னுள் இருக்கும் நீ இதனை நன்கறிவாய்; இப்பொழுதும் அவர்களின் இறப்பை நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சம் எய்துகின்ற துயரத்தை நீ அறிவாயன்றோ. எ.று.
எப்போதும் இறைவன் திருவருள் நலத்தையே எண்ணுவோர்க்கு இன்பம் பெருகுவ தியல்பாதல் விளங்க, “என்றும் நாடுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே” என்று எடுத்து மொழிகின்றார். எனது நன்மையையே நினைந்து எனக்கு நல்லனவே செய்த பெரியோர் பலருண்டு; அவரை யிழப்பதினும் என் வாழ்வுக்குக் கேடு செய்வது வேறு யாதுமில்லை; அப் பெருமக்கள் இறந்தனர்; அவர் இறப்பு என்னைப் பெரிதும் வருத்திய தென்பாராய், “நல்லோர் உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவிலை அளவிலை” எனவும், எனக்குள் இருக்கும் நீ அதனை நன்கறிவாய் என்பாராய், “அறிவாய்” எனவும் இயம்புகின்றார். கண்டும் கேட்டும் அன்று எய்திய துன்பம், இன்றும் என்னின் நீங்காமல் நின்று வருத்துகிறது என்பாராய், “இன்று அவர் பிரிவை நினைந்திடுந் தோறும் எய்திடும் துயரும் நீ யறிவாய்” என்று உரைக்கின்றார். தமது மனத்தின் மறவா வியல்பைக் காட்டற்கு “நாயினேன்” எனக் கூறுகின்றார்.
இதனால் துன்பத்துப் புலம்பலும் தமது உயிரியல்பு உணர்த்தியவாறாம். (17)
|