3427.

     நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில்
          நெறியலா நெறிகளில் சென்றே
     கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என்
          றயலவர் குறித்தபோ தெல்லாம்
     உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே
          உற்றென நடுநடுக் குற்றே
     துலைபுரிந் தோடிக் கண்களை மூடித்
          துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.

உரை:

     என்றும் நிலையாக இருந்தருளும் நித்தப் பொருளாகிய சிவ பெருமானே, இவ்வுலக வாழ்வில் தீய வழிகளில் சென்று உயிர்க் கொலை புரிந்த கொடியவர் இவர் என்று சிலரைச் சுட்டி அயலார் உரைத்த போதெல்லாம் உலைக்களத்து வெவ்விய தீயை வயிற்றுள்ளே வைத்துள்ளது போல மிகவும் நடுக்கமுற்றுத் தூரத்தே யகன்று என்னுடைய இரு கண்களையும் மூடிக்கொண்டு வருந்தியது தேவரீர் அறிந்ததன்றோ. எ.று.

     “பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்” என்று சான்றோர் பாராட்டி உரைத்தலால், சிவனை “நிலை புரிந்தருளும் நித்தனே” என்றும், புகழ்கின்றார். தீவினை செய்வது நன்னெறி யல்லாத தீயநெறியாதலால் அந்நெறியில் சென்று கொலை முதலிய தீய செயல்களைச் செய்பவர்களை, “நெறியலா நெறிகளிற் சென்று கொலை புரிந்திட்ட கொடியவர்” என்று கூறுகின்றார். உயிர்க் கொலை புரிந்த ஒருவரைக் காட்டி, “இவர் கொலை புரிந்திட்ட கொடியவர்” என்று அயலவர் காட்டக் கண்டு வடலூர் வள்ளல் வருந்திய திறத்தைக் “குறித்த போதெல்லாம் கேட்டு நடுக்கமுற்று நெடிதகன்று துயர்ந்தது” என்று கூறுகின்றார். கொலை புரியும் தீயவரைக் காண்டலும் தீதாதலின் அவர்களைக் கண்டதும் “உலை புரிந்திடு வெந்தீ வயிற்றுள்ளே உற்றென நடுநடுக் குற்றேன்” என்றும் “அச்சத்தால் நெடுந் தொலைவில் அகன்று கண்களை மூடிக் கொண்டேன்” என்றும் உரைக்கின்றார். உலை புரிந்திடு வெந்தீ, கொல்லன் உலைக்களத்து எழுகின்ற மிக்க தீ. வலிய இரும்பையும் நீராய் உருக்கும் வெம்மை யுடையதாகலின், ‘வெந்ததீ’ எனச் சிறப்பிக்கின்றார். நடுக்க மிகுதி உணர்த்துவதற்கு நடுநடுக் குற்று என்ற அடுக்குகின்றார். நடுநடு - இரட்டைக் கிளவி. துலை புரிதல் - நெடுந் தூரத்தே அகன்று ஒழிதல். துயர்தல் - துயரப்படுதல்.

     இதனால், கொலை புரியும் தீயவரைக் கண்டு வள்ளற் பெருமான் அஞ்சி நடுங்கிய திறம் உரைத்தவாறாம்.

     (18)