3428. ஓர்ந்தஉள் அகத்தே நிறைந்தொளிர் கின்ற
ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்
வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்
கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
உரை: மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கையாம். எ.று.
மெய்ப் பொருள் உணர்ந்த மேன்மக்கள் உள்ளம் மெய்ம்மை யுணர்வால் ஞானவொளிப் பெற்று விளங்குவதாகலின், அங்கே எழுந்தருளும் சிவபரம்பொருளை, “ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே” என உரைக்கின்றார். “ஓர்த்து உள்ளம் உள்ளதுணரின் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” என்று சான்றோர் உரைப்பது காண்க. ஊர்களில் இறந்தார் இறப்பைத் தெரிவிப்பதற்குப் பறை கொட்டுவது இயல்பாதலின் உலகியல் அதிலே மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல்லொலி கேட்ட போதெல்லாம் பறை யோசை இறப்பை குறிக்கும் அமங்கல ஓசையாதல் பற்றி, “பறையின் வல்லொலி” எனக் குறிக்கின்றார். காந்துதல் - வெம்மையுற்று வெதும்புதல். உடல் வெதும்புவதால் உள்ளம் திண்மை குலைந்து கலங்குதலின், “காந்தி என்னுள்ளம் கலங்கிய கலக்கம்” என்று இசைக்கின்றார். இறந்தார் இறப்பை பறையொலி செய்து பலரும் அறியப் பண்ணுவது ஊர்களில் ஓங்கிய செயலாவது பற்றி “ஏந்தும் இவ்வுலகு” என இயம்புகின்றார். வாழ்வார்க்கு வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சி இறப்பால் சீர்குலைதலின், “இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே” என வுரைக்கின்றார். பிறப்பை விரும்புவது போல இறப்பை விரும்பாமல் அஞ்சுவது உலகவற்கு இயல்பாதலால் “என்னுளம் நடுங்குவது இயல்பு” என எடுத்துரைக்கின்றார்.
இதனால், இறப்புப் பற்றிய அச்சத்தால் பறையொலி கேட்டு வடலூர் வள்ளல் நடுங்கிய திறம் உரைத்தவாறாம். (19)
|