3429.

     மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை
          வள்ளலே உலகர சாள்வோர்
     உறைமுடி வாள்கொண் டொருவரை ஒருவர்
          உயிரறச் செய்தனர் எனவே
     தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்
          தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
     இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய்
          என்னுளம் நடுங்குவ தியல்பே.

உரை:

     வேத முடிவில் விளங்குகின்ற ஒப்பற்ற தலைமை நலம் பொருந்திய வள்ளலாகிய சிவனே! உலகில் அரசராயினோர் உறையில் பொருந்திய வாளைக் கொண்டு ஒருவரை யொருவர் தாக்கி உயிர் கெடச் செய்கின்றார்கள் என்று நிலவுலகில் பிறர் சொல்லக் கேட்ட போதெல்லாம் சிறியவனாகிய யான் சோர்வுற்று மனம் நடுங்கி அயர்ச்சி யுற்றேன்; இவ்வுலகில் கொலை என்று சொன்னால் சிறிதும் பொறாது என் உள்ளம் அச்சத்தால் நடுங்குவது இயற்கை; என்னுள் இருக்கும் இறைவனாகிய நீ இதனை நன்கறிவாய். எ.று.

     வேத ஞானத்தின் முடிபொருளாய் ஒப்புயர்வற்று விளங்கும் பரம் பொருளாதலின், “மறைமுடி வயங்கும் ஒரு தனித் தலைமை வள்ளலே” எனச் சிவபெருமானைப் புகழ்கின்றார். உலகாளும் அரசர்கள் வரலாற்றைக் கூறுவோர் அவர்கள் தம்மில் போய் செய்து வாளால் தாக்குண்டு இறந்ததை உரைப்பது பற்றி, “உலகரசாள்வோர் உறைமுடி வாள் கொண்டு ஒருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே தறையுறச்சிறியேன் கேட்ட போதெல்லாம்” என வுரைக்கின்றார். வாட் படையைத் தோலால் செய்த உறையில் வைப்பது மரபாதலின், “உறைமுடி வாள்” என உரைக்கின்றார். உயிரறச் செய்தலாவது கொல்லுதல். தரையென்பது எதுகை நோக்கித் தறை யென வந்தது. வரலாறு கூறுவோர் அரசர்கள் வாட் போர் செய்து மாண்டதை உரைப்பக் கேட்டுப் பொறுக்க மாட்டாத சிறுமை யுடைமை விளங்கச் “சிறியேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். இறை - சிறிது.

     இதனால் வடலூர் வள்ளல் கொலைக் கஞ்சிய திறம் கூறியவாறாம்.

     (20)