3430.

     தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர்
          தாய்க்குநால் என்பதை இரண்டாய்
     வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன்
          நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
     தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில்
          சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
     காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்
          கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.

உரை:

     பெற்ற தாய் உரைத்த உரையிலே மற்றொரு தாயின் சொல்லை நான்கு மடங்கு மேன்மை யுடையதாகக் கொளல் வேண்டும் என்பது கைவிட்டு இரண்டு பட்டதாகக் கருதி வாய்மொழியால் வஞ்சனையாக உரைத்தேன்; எழுத்திலும் எழுதினேன்; பின்னர் அதனை மனத்தின்கண் நினைத்து வருந்தினேன்; தூய சொற்களைப் பேசும் நண்பர்களும் நம்புகின்றவர்களும் ஆகியோர் மனையின்கண் தவறு நினைந்தேன்; பின்னர் அது நினைந்து வருந்தினேன்; அவர்பால் சினந்து பேசினேன்; பொய் யுரைத்தேன்; பின்னர் அதனை நினைந்து மனம் கலங்கினேன். எ.று.

     பெற்ற தாய் உரைத்ததை ஒன்றாக மனத்திற் கொள்வது போல பிற தாய்மார்கள் உரைப்பதை நான்கு மடங்கு சிறந்ததாகக் கொள்ளல் வேண்டும் என்ற கருத்துரையை உள்ளொன்றும் புறமொன்றுமாகிய இரண்டகமாகக் கொண்டு மெய்ம்மொழியையும் வஞ்சகமாக உரைப்பதும் எழுவதும் செய்தேன் என்பார், “தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன்” என வுரைக்கின்றார். வரைந்தேன் என்பதற்குப் பொருளாகக் கொள்ளாமல் விலக்கினேன் என்று உரை கூறுவதும் உண்டு. பின்னர் அத் தவற்றை நினைந்து வருந்திய திறத்தை “நடுங்கினேன் நினைத்ததை மனத்தே” என்று உரைக்கின்றார். உண்மையே பேசும் நண்பர்களைக் “காய்மொழி நேயர்” என உரைக்கின்றார். தமது உரையிலும் செயலிலும் நம்பிக்கை உள்ள நன்மக்களை “நம்பினோர்” எனக் குறிக்கின்றார். இருதிறத்தாருடைய மனைக்குச் சென்றபோது மனத்தின்கண் தவறு நினைத்ததை எண்ணி வருந்தும் வள்ளற் பெருமான் “இல்லின் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்” என்று சொல்லுகின்றார். காய்மொழி - சினந்துரைக்கும் கடுஞ்சொல். பின்னர்த் தாம் செய்த குற்றங்களை நினைந்து வருந்திய செயலைக் “கலங்கினேன்” அது நினைந்தெய்தாய்” எனக் கூறுகின்றார்.

     இதனால், பிற தாயர் உரைக்கும் சொற்களைப் புறக்கணித்ததும், நண்பர் மனையில் குற்றம்படப் பேசியதும் நினைந்து வருந்திய திறம் உரைத்தவாறாம்.

     (21)