3431. எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே
இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்
பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம்
உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
உரை: அறிவால் எய்துதற்கரிய பரம்பொருளே! திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற இறைவனே, நாட்டில் வறுமையால் வருந்தும் அவர்கள் பசி மிகுந்து களைப்புற்றுத் துன்புறுகின்றனர் என்றுணர்ந்த மற்றவர்கள் வந்து உரைத்த போதெல்லாம் அச்சத்தால் பகீர் என்று மனம் நடுங்கினேன்; விரும்பப்படுகின்ற இவ்வுலகில் பசி என்று சொன்னால் என் மனம் இயல்பாகவே நடுங்கும் தன்மையுடையது காண். எ.று.
திருவருள் ஞானத்தாலன்றி இயற்கையும் செயற்கையுமாகிய அறிவுகளால் எய்துதற் கருமை பற்றி, “எட்டரும் பொருளே” என வுரைக்கின்றார். தில்லைச் சிற்றம்பலத்தின்கண் ஆடல் புரியும் பரமனாயினும் உலகுயிர்களின்பால் இடையறவின்றித் தங்குபவன் என்பது பற்றி, “திருச் சிற்றம்பலத்தே இலகிய இறைவனே” எனப் பாராட்டுகின்றார். உண்பொருள் வறுமையால் உணவின்றி வருந்துவோர் பட்டினி யுற்றோராவர். உணவு இவ்வழிப் பசித்தெழுந்து உடலை வெதும்பி ஆற்றலைச் சிதைத்தலின், “பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர்” என்று அவர்களைக் கண்டோர் வள்ளற் பெருமானிடம் உரைக்கின்றனர். பசியால் பசியால் பரதவிக்கும் அவல நிலையைக் கண்டு போந்து உரைப்பவரை “ஒட்டிய பிறர்” என உரைக்கின்றார். பசித் துன்பத்தால் எய்தும் வருத்தத்தை நன்கு அறிந்தவராதலின், “உளம் பகீர் என நடுக்குற்றேன்” என உரைக்கின்றார். பசித் துன்பத்தை அறியாதவர் உலகத்தில் இலரெனினும் சிறப்பாகத் தாம் பெருந் துன்பம் உற்று இருக்கின்றாராதலின், “பசி எனில் என்னுளம் நடுங்குவது இயல்பு” என எடுத்தோதுகின்றார். வாழ்வோர் நிலைபெற வாழ்தற்கு விரும்பும் இயல்பு வாய்ந்தது இவ்வுலகம் என்பது பற்றி, “இட்ட இவ்வுலகு” என்கின்றார். இஷ்ட இவ்வுலகு என்பது இட்ட இவ்வுலகு என வந்தது.
இதனால், பிறர் படும் பசித் துன்பம் பொறாது வள்ளற் பெருமான் வருந்தும், திறம் கூறியவாறாம். (22)
|