3432.

     பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும்
          பகரும்நேர் முதற்பல வயினும்
     சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச்
          சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
     மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை
          வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
     வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல
          வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.

உரை:

     பல்லிகள் பல தலைக்கு மேலும் இடப்பக்கத்தும் முகத்துக்கு நேரிலும் வேறு பல இடங்களிலும் சொல்லும் போதெல்லாம் பிறர் அடைகின்ற துன்பத்தைச் சொல்லுகின்றனவோ என எண்ணி என்னுடைய மென்மையான உள்ளம் வருந்தி அயர்ந்தேன்; கூகைகள் இரவுப் போதில் தமது வெவ்விய குரலெடுத்துக் குழறுந் தோறும், வலிய புலியின் முழக்கம் கேட்ட பசுவைப் போல அஞ்சி வருந்தினேன்; இவற்றை என்னுள் உறையும் எந்தையாகிய நீ இனிதறிவாய். எ.று.

     வீடுகளில் கொசுகுகளைப் பிடித்துண்டு வாழும் பல்லிகள் ஒலிக்குமாயின், மனையவர்க்கு எய்த விருக்கும் நலம் தீங்குகள் முன்கூட்டித் தெரிவிக்கப்படுகின்றன என்பது தமிழர்களிடையே இரண்டாயிரமாண்டு கட்கு முன்பிருந்தே இருந்து வரும் கொள்கையாகும். பல்லிகள் ஒலித்தலைச் சொல்லுதல் என்பர். தலைக்கு மேல் ஒலிக்கினும், கேட்போர்க்கு இடப்பக்கம் ஒலிக்கினும் யாதோ தீது வரவு சொல்லுவதாக மனையவர் கருதுவர். இந்த வழக்காறு பற்றியே, “பல்லிகள் பலவாய் இடத்தும் உச்சியினும் நேர் முதற் பலவயினும் சொல்லிய தோறும் பிறர் துயர் கேட்கச் சொல்கின்றனவோ எனச் சூழ்ந்து மனம் நொந்து இளைத்தனன்”என வுரைக்கின்றார். “செல்லுநர்க்கு உறுவது கூறும் சிறு செந்நாவின் தெண்குரல் கணிவாய்ப் பல்லி” (குறுந். 16) எனச் சங்கச் சான்றோர் உரைப்பது காண்க. பல்லிகள் இருந்தொலிக்கும் இடத்துக் கேற்பப் பொருள் வேறு வேறு கூறுபவாகலின், “இடத்தும் உச்சியினும்” என்றதனோடமையாது, “பகரும் நேர் முதற் பலவயினும் சொல்லிய தோறும்” என வுரைக்கின்றார். சூழ்தல் - நினைத்தல். தாம் உறையுமிடத்துப் பல்லிகள் சொல்லுவது, தமக்கு உறுவது கூறுவதாகும் என எண்ணாமல் தம்போல் உறையும் பிறர்க்கு எய்தவிருக்கும் துன்பத்தைத் தமக்குத் தெரிவிப்பதாகக் கருதுவது விளங்க, “பிறர் துயர் கேட்கச் சொல்கின்றவோ எனச் சூழ்ந்து” என மொழிகின்றார். பிறர் துன்பம் காணப்பொறாத பெருந்தகை மனமுடையவராதலின், வடலூர் வள்ளல், “மெல்லிய மனம் நொந்து இளைத்தனன்” எனக் கூறுகின்றார். கூகையைப் பேராந்தை எனவும், கோட்டான் எனவும் வழங்குவர். இதன் குழறு குரலும் கேட்போர்க்கு அச்சம் விளைப்பதாகவும், தீங்குரைப்பதாகவும் நாட்டு மக்கள் கருதுபவாகலின், “கூகை வெங்குரல் செயும் தொறும் வருந்தினேன்” என விளம்புகின்றார். வல்வியம் - வன்மை மிக்க புலி. தமது மெல்லிய மனத்துக்குக் கூகையின் குழறு குரல், புலி முழக்கம் போல்கிற தெனவும், அம்முழக்கம் கேட்ட பசுவின் மனம் அச்சத்தால் நடுங்குவது போலத் தமது மனம் நடுங்கிய திறம் விளங்க, “வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப் போல வருந்தினேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், பல்லிகள் செய்யும் ஒலிக்கும் கூகைகளின் குரலுக்கும் பொருள் கருதி வள்ளலார் மனம் வருந்திய திறம் தெரிவித்தவாறாம்.

     (23)