3433. காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
உரை: காக்கைகள் தம்மிற் கூடிக் கூவிக் கரைந்தாலும், பருந்துகளின் வெவ்விய குரலைக் கேட்பினும், மனம் தளர்ந்தேன்; ஆந்தைகள் தம்மிற்றாக்கிக் கடுங்குரல் செய்யக் கேட்டு அஞ்சினேன்; சாக்குருவியின் ஓசை கேட்டு மனம் சோர்ந்தேன்; வேறு கொடிய தீச் சகுனங்களைச் செய்கின்ற பறவைகளால் அறிவு மயங்கினேன்; நஞ்சு பொருந்திய பாம்பைக் கண்ட போது மனம் நடுங்கிச் சுருங்கினேன்; எனது இவ்வியல்பை, எந்தையே நீ இனிதறிவாய். எ.று.
காக்கைகளில் ஒன்று இடையூறின்றி ஏனைக் காக்கை பலவும் தம்மிற் கூடியிருந்து கரையுமாகலின், அவற்றின் குரல் கேட்டுக் கலக்க முற்றேன் என்று கூறுகின்றார். இறந்த விலங்குகளின் உடலைத் தின்னும் ஆர்வத்தால் பருந்துகள் கூடித் தம்மிற் பிணங்கிப் பூசலிட்டுச் செய்யும் ஓசை காண்பார்க்கு அச்சம் விளைவித்தல் பற்றி, “பருந்தின் கடுங்குரல் கேட்டு உளம் கலங்கினேன்” என வுரைக்கின்றார். பாழ் மரங்களிற் கூடி ஒன்றிற்கொன்று எதிர் குரலெடுத்துப் பேரொலி செய்து இரவுப் போதில் மக்கட்கு அச்சம் பயப்பது இயல்பாதலின், “தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்” என மொழிகின்றார். நள்ளிரவில் சாவெனத் தனிக்குரலெடுத்துக் கூவுவது சாக்குருவி எனப்படுவது; அதன் குரல் தீச் சகுனமாகக் கருதப்படுகிறது; அதனால், “சாக்குரற் பறவையால் தளர்ந்தேன்” எனக் கூறுகின்றார். செயல் மேலெழும் உள்ளம் தீச் சகுனங்கள் தோன்றின் எழுச்சி குன்றிச் சோர்வுறுவது பற்றி, “வீக்கிய கொடுஞ் சகுனங்கள்” எனக் குறிக்கின்றார். பாம்பெனிற் படையும் நடுங்கும்” என்பது உலகுரை. அதனாற் வள்ளற் பெருமான் “விடத்தில் ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள் ஒடுங்கினேன் நடுங்கினேன்” எனத் தெரிவிக்கின்றார்.
இதனாற் தீச்சகுனம் செய்யும் புள்ளொலி கேட்டு வள்ளற் பெருமான் அஞ்சி வருந்திய திறம் கூறியவாறாம். (24)
|