3434.

     வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு
          வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
     சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத்
          தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
     கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங்
          கோள்செயும் ஆடவர் மடவார்
     ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம்
          உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

உரை:

     பாம்பின் வேறாய்ப் பலவகை விடம் பொருந்திய உயிர்களைக் கண்டால் அஞ்சுவேன்; நாய்கள் ஒன்றை யொன்று சீறிக் குரைக்கும் ஓசையைக் கேட்டு உடல் நடுங்கினேன்; அந்த நாய்கள் தனித்தும் கூடியும் எழுப்பும் அழுகுரலைக் கேட்பினும் அறிவு மயங்கினேன்; மேலும் தீய சகுன வகையில் கூறப்படும் விலங்குகள் பறவைகள் ஊர்வனவற்றையும், வெவ்விய கோளுரைகளைப் பேசும் ஆண்மக்களையும் பெண்டிரையும் கண்டாலும் அவர்களின் தீது விளைவிக்கும் கொடுஞ் சொற்களைக் கேட்பினும் மனம் வருந்தி மயங்கினேன்; எந்தையாகிய சிவனே, இவை நீ அறிந்தவை யல்லவோ. எ.று.

     முன்னைத் திருப்பாட்டில் “விடத்தில் ஊக்கிய பாம்பைக்” கூறினாராகலின், இங்கே “வேறு பல்விடஞ்செய் உயிர்கள்” என வுரைக்கின்றார். அவை தேள், தெறுக்கால், பூரான் எனப் பலவகை யுண்மையின், “விடஞ்செய் உயிர்கள்” எனப் பொதுப்பட மொழிகின்றார். நாய்கள் பலவாய்க் கூடிப் பிணங்கிச் சீறிக் குரைத்துச் செய்யும் பூசலை, “வெய்யக் நாய்க் குழுவின் சீறிய குரல்” எனவும், தனித்தும் ஓரிரண்டு கூடியிருந்தும் அழுகுரல் எடுப்பது நாய்க் கியல்பாதலின், “அழுகுரல் கேட்டு” எனவும், அதன் அழுகுரலைத் தீய நிமித்தமாக நாட்டவர் கருதுவது பற்றித் “தியங்கினேன்” எனவும் இயம்புகின்றார். வெஞ்சகுனக் கூறு - தீய சகுனம் எனக் கருதப்படும் வகைகள். விலங்கினத்திலும் பறவையினத்திலு ஊர்ந்து வாழும் உயிரினத்திலும் தீச்சகுனமாவன எனப் பல நாடு தோறும் கூறப்படுவன வுண்மையால் அவையெல்லாம் அடங்க, “வெஞ்சனக் கூறுதாம் விலங்கு பறவை ஊர்வன” என வுரைக்கின்றார். மக்களினத்து ஆண்களிலும் பெண்களிலும் கோள் பல சொல்லித் தீது விளைவிப்பவர் உண்டாதலால், அவர்களை “வெங்கோள் செயும் ஆடவர் மடவார்” என்றும், அவர்கள் உரைப்பவை தீங்கு பயப்பனவாதலால், ”ஊறு செய் கொடுஞ் சொல்” என்றும் இசைக்கின்றார். இவைக்கு - சாரியை பெறாத உருபு புணர்ச்சி. உயங்குதல் - மெலிதல்.

     இதனால், தீய நிமித்தமாவனவற்றுக்கு வள்ளற் பெருமான் அஞ்சிய திறம் உரைத்தவாறாம்.

     (25)