3435. நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும்
நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும்
உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று
பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே
நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, வெண்மை நிறமுடைய கண்விழியின் கீழ்ப் புறத்திலும் தோளிலும், பொலிவு நிறைந்த உடம்பின் சிற்சில வுறுப்புக்களிலும் பொருந்திய தோல் தடித்துத் துடுக்குந் தோறும், கருத்தில் எண்ணி, இத்துடிப்புக்கள் பிறருக் குண்டாகும் துன்பத்தைக் காட்டற்கு உண்டாகின்றன என்று நினைந்து அறிவு கலங்கி மயங்கி மனத்திண்மை யழிந்தேன்; தூய்மை மணம் பொருந்திய உடையில் கறையுண்டாகக் காணின் நான் மனம் நடுங்கிய திறத்தை என்னுள் இருக்கும் எந்தையாகிய நீ நன்கறிவாய். எ.று.
நிறம் - ஈண்டு வெண்மை குறித்தது. கண்ணிமைக்குப் புறத்தில் மேலுள்ள புருவங்களும் கீழுள்ள தசைகளும் ஓரொருகால் துடிப்பதுண்மையின், “நிறமுறு விழிக் கீழ்ப் புறம்” என எடுத்தோதுகின்றார். குறைவின்றி யமைந்த உடல் உறுப்புக்களைக் குறிக்க “நிறை யுடம்பு” என மொழிகின்றார். உறுதோல் - உறவு தோல் என வந்தது. சில சமயங்களில் தோல் தடிப்புற்றுத் துடிப்பது பற்றி, “தடுத்துத் துடித்திடுந் தோறும்” எனச் சொல்லுகின்றார். இத்துடிப்புக்கள் பலவற்றிற்கும் நாட்டவர் நன்றும் தீதுமாகிய பொருள் கற்பனை செய்து உரைப்பது மரபாதலால், “பிறர் துயர் காட்டத் துடித்தவோ” எனப் பொருள் கண்டமை தோன்ற, “உன்னி” எனவும், யாவர்க்கு யாது துன்பம் எய்துமோ என நினைந்து திடுக்கிட்டு மனம் வருந்தியதைப் “பேதுற்று மயங்கி நெஞ்சுடைந்தேன்” எனவும் இயம்புகின்றார். மாசு மறுவில்லாத தூய வுடை நல்லதொரு மணம் கமழ்தலின், “நறுவிய துகில்” என்று சிறப்பிக்கின்றார். பிறர் கண்டு எள்ளி யிகழ்தற்கு ஏதுவாதலால், “துகிலிற் கரையுறக் கண்டு நடுங்கினேன்” என வுரைக்கின்றார்.
இதனால் உடம்பில் தோன்றும் துடிப்புக்கும் உடையிற் படியும் கறைக்கும் வள்ளற் பெருமான் உரைத்த திறம் கூறியவாறாம். (26)
|