3436. மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும்
மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே
இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல்
ஆகும்அத் துயர்உறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம்
பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, மகளிர் சிலர் என்பதால் வலியப் போந்து கூட முயன்ற போதெல்லாம், மனமயக்குற்று இப்பொழுது இவரொடு கூடி உள்ளம் மகிழ்வோமாயின் மகிழ்பவர்க்கு உடனே துன்பம் உண்டாகும்; துன்பத்துக் காளாகிய பிறருடைய துன்பத்தைக் காண வேண்டிய நிலைமை நமக்கு எய்தும்; இவ்வகைத் துன்பங்களைக் காண்டற்கு எனது மனம் பொறாது; இச்செயல் குற்றமாகும் என நினைந்து நான் உள்ளம் அஞ்சியதை நீ நன்கறிவாய். எ.று.
காம வேட்கையால் அறிவு திரியும் மகளிரும் உண்டாதலால், தாம் விரும்பும் ஆடவர்பால் இடம் நோக்கி வலியப் போந்து கூடுவது உலகியலில் உண்மையின் “மங்கையர் எனைத் தாம் வலிந்துறந்தோறும்” என வுரைக்கின்றார். காம நிலையில் மகளிரினும் ஆடவ ருள்ளம் எளிதில் மெலிவுறுமாதலால், “மயங்கி” என்றும், இந்நிலையில் வள்ளற் பெருமான் அறிவறை போகாது பின் விளைவு நினைந்து வீறு கொண்டது விளம்புவாராய், “இவரொடு முயங்கி இங்குளம் தளித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும்” என்றும் இயம்புகின்றார். இவ்வாறு இன்னல் உற்றோர் தம்பால் போந்து உற்ற துரைத்துத் துயருறக் கண்டு வருந்தினவராதலின், “நமக்கு இன்னல் தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டலாகும்” எனவும், கண்டு வருந்தும் வருத்தத்தைப் பொறுக்க மாட்டாமைக் கூறுவார், “அத்துயருறத் தரியேம்” எனவும் கூறுகின்றார். இப்பெற்றியவாய வருத்தங்களைக் கேட்பதும் காண்பதும் அவை பொருளாகப் பேசுவது இழிவு தருவனவாதலால், “பங்கம் ஈதெனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ யறிவாய்” என வுரைக்கின்றார்.
இதனால், மகளிர் கூட்டத்தின் இழிவு நினைந்து வள்ளற் பெருமான் வீறு கொண்ட திறம் விளம்பியவாறாம். (27)
|