3438. களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட
காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான்
நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க
அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே
பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, மகிழ்ச்சி நல்கும் நல்ல உணவினைக் கண்ட போதும், உண்ட போதும் சுழியும் மனத்துடன் அச்ச மெய்தினேன்; அவ்வப்போது நேர்ந்த மங்கல நிகழ்ச்சிகளில் அன்பர்கள் அன்பு கூர்ந்து விருந்துண்க என அழைத்த போது அவர்களுக்கு அன்பு மொழிகளால் மறுத்துரைத்தும் அவர்கள் கண் படாமல் ஒளித்தும்
அச்சமுடன் ஒழுகினேன், காண். எ.று.
இனிமைச் சுவையும் உண்டவிடத்து மகிழ்ச்சியும் தரும் உணவை, “களிப்புறு சுகமாம் உணவு” எனக் கூறுகின்றார். நெளிப்புறு மனம் - வேண்டாமை யுணர்வால் சுழிக்கும் மனம். எப்போதும் உளவாதல் இல்லையாதலால், “நேர்ந்த பல் சுகங்கள்” எனச் சிறப்பிக்கின்றார். சுகங்கள் - மங்கல நிகழ்ச்சிகள். சுகம் குன்றிய போது மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவ தின்மை பற்றிச் “சுகம்” என மொழிகின்றார். சுகம் - செல்வக் காலம். விருந்துண்டலை, விருந்தயர்தல் என்பது பற்றி, “விருந்துண்டயர்க” என வுரைக்கின்றார். அன்பு மொழிகளால் உரைக்கும் மறுத்துரையை, “ஒளிப்புறு வார்த்தை” எனவும், மறுப்பினும் விடாது வற்புறுத்துவார்க்கு அவர் கண் படாமல் ஒளித்துக் கொண்டமையும், ஒளிப்பு வெளிப்படுமோ என அஞ்சினமையும் தோன்ற, “அயல் ஒளித்துப் பயத்தொடும் உற்றனன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், விருந்துண்டற்கு வள்ளற் பெருமான் அஞ்சிய திறம் தெரிவித்தவாறாம். (29)
|