3439. இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்
இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்
சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பா கொடுத்தவை எல்லாம்
ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து
வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
உரை: இனிமை மிக்க உணவுண்ட போதெல்லாம் இவ்வுண்டி நலத்தால் இனி எவ்வகைத் துன்பம் எய்துமோ என்று மனம் நடுங்கி வெறும் வயிற்றோடு இருந்தேன்; அன்பினால் அன்பர்கள் கொடுத்தவை யெல்லாம் கண்டு தெய்வமே, இவற்றால் என் மனம் வன்கண்மையுடையதாகச் செய்தல் வேண்டா மென்று அச்சத்தால் அவற்றை வாங்கியுண்டிருந்தேன். எ.று.
இனிமைச் சுவை மிக்க உணவை, “இன்புறும் உணவு” என்று குறிக்கின்றார். உணவு உண்பதை உணவு கொள்வது என்ற வழக்குப் பற்றி, “உணவு கொண்ட போதெல்லாம்” என்று கூறுகின்றார். இனிய வுணவுகள் சில சமயங்களில் நோய் செய்வது உண்டாகையால் “இச் சுகத்தால் இனி யாது துன்புறுங் கொல்லோ” என்றும், அத் துன்பம் எய்தாமல் விலக்குதற் பொருட்டு உண்ணாது இருந்தமை விளங்க, “உளம் நடுங்கிச் சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்” என்றும் இயம்புகின்றார். அன்பர்கள் அன்பினால் கொடுப்பவை சில சமயங்களில் மனத்தின்கண் வன்தன்மையை உண்டு பண்ணுவ தியல்பாதல் பற்றி, “அன்பிலே அவர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கி யுண்டிருந்தனன்” என்று கூறுகின்றார். அன்பர் கொடுப்பவற்றை மறுப்பின் அது வன்செயலாய் முடிவதுண்டாதலால் அது கருதி, “ஐயகோ தெய்வமே வன்புறச் செய்யேல்” என்று உரைக்கின்றார் எனினும் அமையும். வன்செயல்களை எவ்வகையிலும் விரும்பாதவராதலால் வள்ளற் பெருமான், “பயந்து வாங்கி யுண்டிருந்தனன்” என்று கூறுகின்றார். உண்ணாத வயிற்றை வெறுவயிறு என்பது வழக்கு.
இதனால், வன்கண்மைக்கு அஞ்சி யன்பர் அன்பால் தரும் உணவை உண்டிருந்தமை தெரிவித்தவாறாம். (30)
|