3440. உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி
உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்
பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்
உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள
மனநடுங் கியதுநீ அறிவாய்.
உரை: இவ்வுலகில் பிறந்து உலகியல் உணர்ச்சி விளங்கிய நாள் முதல் ஒருசில நாட்களில் என்னைப் பெற்ற தாயின் மனவருத்தத்தைப் பார்ப்பதற் கஞ்சி மிக்க உணவை உண்டேன்; சிலநாள் உற்றவர்களும், நண்பர்களும், அன்பர்களும், மனவாட்டம் கொள்வதைக் காண்பதற்கஞ்சி யவர்கள் விரும்புவனவற்றை யுண்டேன்; இவையன்றி இன்சுவை உணவு கொள்வதற்கு என் மனம் வருந்தியதை எந்தையாகிய பெருமானே, நீ அறிவாய். எ.று.
வாழ்ந்து உயிர்கள் உய்தி பெறற் பொருட்டுப் படைக்கப்பட்டதாகலின், உலகை “உற்ற தாரணி” என்கின்றார். உலகியல் வாழ்க்கை யுணர்வை உலகுணர்ச்சி என உரைக்கின்றார். அஃதாவது உலகத்தோடு ஒப்ப வொழுகுதல். உணவளிக்கும் தாயின் மனம் நோவாமல் ஒழுக வேண்டு மென்பது உலகியல் அறமாதலின், தான் இட்ட உணவை மகன் நிரம்ப உண்ணாவிடத்து தாயின் மனம் வருந்தும் என்பது பற்றி, அதனை முற்றவும் உண்டமை விளங்க, “ஒரு சில நாள் பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன்” என்று கூறுகின்றார். பேருணவு - மிக்க வுணவு, உற்றவர் - அன்பால் வந்தடைந்தவர். நண்பர்களும் அன்பர்களும் நட்பாலும் அன்பாலும் கொடுப்பவற்றை உண்ண மறுத்த வழி மனம் வருந்துவராதலால், அவர் வருந்தாமைப் பொருட்டு அவர் கொடுத்தவற்றை மறாது உண்டது உரைப்பாராய், “சில நாள் உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்” என்று உரைக்கின்றார். அஞ்சினேன் - முற்றெச்சம். மீதூண் உண்டல் குற்றமாதலின் இவற்றை எடுத்தோதிய வள்ளற் பெருமான் மற்று இவையெல்லாம் சுகம் உணாக் கொள்ள மனநடுங்கியது நீ அறிவாய்” என விளம்புகின்றார். சுகவுணா - இனிய உணவு.
இதனால், மிதமான உணவையே உண்டு வாழ்ந்த திறம் கூறியவாறாம். (31)
|