3441.

     தொழுந்தகை உடைய சோதியே அடியேன்
          சோம்பலால் வருந்திய தோறும்
     அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால்
          அளவிடற் கெய்துமோ பகலில்
     விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும்
          விட்டிடா வன்மையால் தூங்கி
     எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன்
          என்செய்வேன் என்செய்வேன் என்றே.

உரை:

     யாவராலும் தொழப்படும் தகைமை பொருந்திய சோதிப் பொருளே, அடியவனாகிய யான் சோம்பலுற்று வருந்திய போதெல்லாம் என்னுடைய மனம் துயருற்று விளைவு நினைந்து அஞ்சிய திறத்தை அளவிட்டுரைக்க முடியாது; பகற் போதில் சோர்வினால் உறக்கம் வந்த போது அதைத் தடுத்துத் தூங்காமல் இருக்கு முயன்றும் விடாது பிணித்தமையின் தூங்கி யெழுந்த போதுகளில் அச்சத்தோடே எழுந்தேன்; இக்குற்றங்கட்கு யாது செய்வேன். எ.று.

     சோதியே சுடரே எனச் சான்றோர் தொழுவது பற்றிச் சிவனை, “தொழும் தகையுடைய சோதியே” என்று துதிக்கின்றார். சோம்பல் சான்றோர் நூல்களில் மடி யென வழங்கும். இம்மடிமைக்கு ஆளாகுபவர் பல்வகைக் குற்றங்கட்கு உரியராய்த் துன்புறுவராதலின், “அடியேன் சோம்பலால் வருந்திய தோறும் அழுந்த என்னுள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ” என்று கூறுகின்றார். “நெடுநீர் மறவி மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. ஆழ்ந்த என்பது அழுந்த என வந்தது. நல்ல பல கடமைகளை எண்ணிச் செய்து பயன் கோடற் குரிய பகற் பொழுதை உறங்கிக் கழித்தல் குற்றமாதலால், பகலில் உறங்கியதை நினைந்து வருந்தும் வள்ளற் பெருமான், “பகலில் விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி யெழுந்த போதெல்லாம் பயத்தொடும் எழுந்தென்” எனவும், தூக்கத்தில் கழிந்த பொழுது மீள வராதாகலின், “என் செய்வேன் என்செய்வேன்” எனவும் இயம்புகின்றார். வீழ்தல் - விரும்புதல். உறக்கத்தின் தடுப்பரும் தன்மை குறித்தற்கு “விட்டிடா வன்மையால்” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், வள்ளற்பெருமான் சோம்பலுக்கும் பகலில் தூங்குதற்கும் அஞ்சிய திறம் தெரிவித்தவாறாம்.

     (32)