3442.

     அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில்
          அரும்பெருஞ் சோதியே அடியேன்
     சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம்
          தூக்கமே கண்டனன் தூக்கம்
     வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன்
          மற்றுநான் எழுந்தபோ தெல்லாம்
     தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம்
          தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.

உரை:

     தோற்றக் கேடுகளில்லாத ஒப்பற்ற அம்பலத்தில் விளங்குகின்ற அரும்பெருஞ் சோதியாகிய பரம் பொருளே, அடியவனாகிய எனக்குரிய பொருளோ என்னவோ அறியேன் ஆயினும் அல்லும் பகலுமாகிய எக்காலத்தும் தூக்கமே பொருளாகக் கொண்டேன்; தூக்கம் வந்த போதெல்லாம் அச்சத்தோடே படுத்தேன்; படுத்தெழுந்த போதெல்லாம் என்னோடு தொடர்புடைய அச்சத்தால் சிவனே, தூக்கம் தொலைவது எக்காலம் என்று நினைந்து கொண்டே எழுந்தேன். எ.று.

     முன்னைப் பாட்டில் பகலில் தூக்கம் வந்ததற்கு வருந்திய வள்ளற் பெருமான், இப்பாட்டில் பகலும் இரவும் தூக்கம் போந்து அலைப்பதற்கு வருந்தி, “அடியேன் சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன்” என்று சொல்லுகின்றார். எத்துணை விலக்க முயன்றாலும் விடாது நினைந்து, “அடியேன் சொந்தமோ அறியேன்” என வுரைக்கின்றார். சொந்தம் - உரிமையுடைய பொருள். தூக்கத்தால் காலம் கழிவதற்கு அஞ்சுகிறாராதலின் மனம் நொந்து, “நான் எழுந்த போதெல்லாம் பயத்தொடு படுத்தேன்” எனப் பகர்கின்றார். தூக்கத்தினால் உளதாகும் காலக் கழிவுக்கு அஞ்சுகின்றாராதலின் மனம் நொந்து, “நான் எழுந்த போதெல்லாம் பயத்தொடு “படுத்தேன்” எனப் பகர்கின்றார். தூக்கத்தினால் உளதாகும் காலக் கழிவுக்கு அஞ்சுகின்றாராதலின் மனம் நொந்து, “நான் எழுந்த போதெல்லாம் தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எக்காலம் என்று எழுந்தேன்” என்று முறையிடுகின்றார் தொந்தம் - தொடர்பு.

     இதனால், வள்ளற் பெருமான் தூக்கத்திற்கு அஞ்சிய திறம் சொல்லியவாறாம்.

     (33)