3443. உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன்
உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம்
கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையூறு நடுக்கம் கருதவும் சொலவும்
எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம்
நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
உரை: ஆடற் கிடமாக யுடைய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் ஒப்பற்ற பெருமானே, என் உயிர்க்குயிராய் உணர்வொளி தந்தருளும் பெருமானே, கடையவனாகிய நான் நனவுப் போதிலே கொண்ட நடுக்கம் எண்ணிக்கையில் சிறிதாகும்; கனவுகளின் இடையே நான் கொண்ட நடுக்கம் நினைக்கவும் சொல்லவும் எண்ணவும் எழுதவும் படாத அளவினதாம்; நல்லொழுக்கத்தை நினைக்கும் சிறியவனாகிய யான் உறக்கத்தில் கனவு கண்டு அஞ்சி நடுங்காத நாளே கிடையா தெனவும், எ.று.
தில்லையம்பலத்தைத் தனது திருக்கூத்துக் கிடமாகக் கொண்டவனாதலால் சிவபெருமானை, “உடைய அம்பலத்தில் ஒருவனே” எனப் புகழ்கின்றார். உயிர் தோறும் உள்ளுரையாய் நின்று உணர்வொளி தருபவனாதலால் சிவபெருமானை “என்றன் உயிர்குயிராகிய ஒளியே” என்று வோதுகின்றார். நனவு - உறங்காத காலம். வன்கண்மை பொருந்திய காட்சிகளைக் காணும் போதெல்லாம் மனம் அஞ்சி வருந்தும் இயல்பினராதலால், “கடையன் யான் நனவில் நடுங்கிய நடுக்கம்” என எடுத்துரைக்கின்றார். கனவின் கண் எய்தும் காட்சிகளால் உண்டாகிய மனநிலையை, “கனவில் இடையுறு நடுக்கம் கருதவும் சொல்லவும், எண்ணவும், எழுதவும் படுமோ” என்றும் உரைக்கின்றார். நடை - நன்னடை; அஃதாவது நல்லொழுக்கம். கனவு காணும் போதெல்லாம் அச்சத்தால் மனம் நடுங்கி விழித் தெழுவது தமக்கு இயல்பென்பது தோன்ற, “சிறியேன் கனவு கண்டுளம் நடுங்கிடா நாளும் ஒன்றுளதோ” என்று உரைக்கின்றார்.
இதனால், கனவுக் காட்சிகளால் வள்ளற் பெருமான் அஞ்சி நடுங்கிய திறம் தெரிவித்தவாறாம். (34)
|