3444. பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம்
தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி
எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம்
உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம்
நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
உரை: பகலிலும் இரவிலும் படுத்த போதெல்லாம் தூக்கமாகிய பாவி வந்து சூழ்ந்து கொள்ளுமே என்றும், மாறுபடும் கனவாகிய கொடிய வெவ்விய பாவி வந்து காட்சி தந்து வருத்துமே, இதற்கு என் செய்வது என்றும் நீக்கமுற மனத்தின் கண் நான் அஞ்சி நடுங்கிய நடுக்கத்தை தேவரீர் திருவுள்ளம் அறியுமன்றோ; எந்தையாகிய பெருமானே, கேட்டார் நகைப்புறச்சிறுமையுடைய யான் கனவுகள் கண்டு அஞ்சி நடுங்காத நாள் ஒன்றேனும் உண்டோ. எ.று.
உடலில் இளைப்புத் தோன்றிய போது பகலில் படுப்பதும், இரவுப் போதில் இயல்பாகவே கிடந்து உறங்குவதும், அக்காலங்களில் கனவுகள் தோன்றிக் காட்சி தருவதும் இயற்கையாயினும் உறக்கத்திற்கும் கனவுக் காட்சிகட்கும் அஞ்சும் இயல்பினராதலால், வள்ளற் பெருமான் “பகலிர வடியேன் படுத்த போதெல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே, இகலுறு கனவாம் கொடிய வெம்பாவி எய்துமே என்செய்வோம் என்றே உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்” என்றுவிண்ணப்பிக்கின்றார். இயற்கைக்கு மாறான காட்சிகள் தோன்றுதலின் கனவுகளை “இகலுற கனவாம் கொடிய வெம்பாவி” என்று குறிக்கின்றார். தூக்கமும் கனவும் தமக்குத் துன்பவனுபவங்களாதல் பற்றித் “தூக்கமாம் வெம்பாவி” என்றும், “கனவாம் கொடிய வெம்பாவி” என்றும் வெறுத்துரைக்கின்றார். மனத்தெழும் நடுக்கம் சிறிது போது நீங்குதலின் “உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம்” என்று உரைக்கின்றார். உகல் - நீங்குதல். சில கனவுக்காட்சிகள் இகழ்தற்குரியனவாய் நனவில் கண் நினைந்த வழி நகைத்தற்குரியனவாய் இருத்தலின், “நகலுறச் சிறியேன் கண்ட கனவுகள்” என்று கூறுகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் கனவுக் காட்சிக்கு அஞ்சி நடுங்கிய திறம் தெரிவித்தவாறாம். (35)
|