3445.

     தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும்
          தொழிலிலே வந்தகோ பத்தில்
     சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த
          தருணம்நான் கலங்கிய கலக்கம்
     வகுப்புற நினது திருவுளம் அறியும்
          மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
     மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம்
          மெய்யநீ அறிந்ததே அன்றோ.

உரை:

     தம்மில் கூடிப் பயிலும் இயல்புடைய சிறுவர்கட்குக் கல்வி கற்பிக்கும் தொழிலில் இடையிடையே வரும் சினத்தால் சிறுவர்களின் குற்றத்தைப் பொறுக்க மாட்டாத இயல்பினால் அவர்களை நான் அடித்ததுண்டு; அடித்த அத்தருணத்தில் நான் எய்திய மனவருத்தத்தைத் தெளிவாகத் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். சில உயிர்களின் மேல் மிக்க கோபம் கொண்டு அவற்றை அடித்து அவை படும் பாட்டைக் கண்டு நான் பட்ட வருத்ததை மெய்ம்மைப் பொருளாகிய நீ நன்கு அறிவாய். எ.று.

     சிறுவர்கள் தம்மிற் பலராய்க் கூடிக் கல்வி கற்பதும், விளையாடுவதும் இயல்பாதலால், “தொகுப்புற சிறுவர்” என்று சொல்லுகின்றார். கல்வி கற்பிக்குங்கால் எல்லாச் சிறுவர்களும் ஓரளவாக ஏற்பதில்லையாதலால் தவறு செய்யும் சிறுவர்பால் சினமுண்டாதல் ஆசிரியர்களுக்கு இயல்பாதலாலும், சிறுவர் செய்யும் சிறு தவறுகளைப் பொறுக்கும் பண்பு இல்லாமையாலும் அடிப்பது இயல்பாதலால், “பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் சகிப்பிலாமையினால் அடித்தனன்” என்றும், அடிப்பட்ட சிறுவரது அவலங் கண்டு இரக்கத்தால் மனம் குழையும் தமது தன்மை விளங்க, “அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம்” என்றும் இயம்புகின்றார். தொகுத்தலும் வகுத்தலும் அறிவு நெறியாதலால், “வகுப்புற நினது திருவுளம் அறியும்” எனச் செப்புகின்றார். பகுத்துணர் வில்லாத விலங்குகளின் மேல் அவற்றின் செயல் பற்றிச் சினமுண்டாதல் இயற்கையாதலால், “சில்லுயிர்களில் கோபம் மிகப் புகுந்து அடித்து” எனவும், அடிபட்டவை உடல் நெளிந்தும் வாய்விட்டுக் கதறியும் புலம்புவது கண்டு வள்ளற் பெருமான் வருந்திய திறத்தை, “கோபம் மிகப் புகுந்தடித்துப்பட்ட பாடெல்லாம் நீ அறிந்ததே யன்றோ” எனவும் எடுத்துக் கூறுகின்றார்.

     இதனால், சிறுவர்களையும் சிற்றுயிர்களையும் கோபத்தால் அடித்து அதனால் தாம் வருந்திய திறம் கூறியவாறாம்.

     (36)