3446.

     ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய
          உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
     அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால்
          ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
     பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது
          புந்தியில் அறிந்ததே எந்தாய்
     வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே
          வெதும்பிய நடுக்கம்நீ அறிவாய்.

உரை:

     நெறி திரம்பிய இவ்வுலகியலில் சிறுவர்களிடத்தும் சிற்றுயிர்களிடத்தும் குற்றம் கண்டவிடத்து அடிப்பதற்கு அஞ்சி மனம் வருந்தினேன்; என்னால் திருத்துதற்கு மாட்டாத காலத்தில் மனம் சிறிது கசந்து நான் அஞ்சிய அச்சமெல்லாம் உனது திருவுளம் அறிந்ததேயாகும். உள்ளத்தில் வெடித்து எழும் வெவ்விய சினம் உற்ற போது நான் மனம் வெதும்பி நடுங்கியதும் நீ அறிகுவாய். எ.று.

     ஒடித்தல் - நெறி திரம்புதல். நன்னெறி யொழுகுவோர் மிகச் சிலராதல் பற்றி “ஒடித்த இவ்வுலகு” என்று கூறுகின்றார். உலகு - இங்கு உலகியல் மேற்று. தீமை கண்டவிடத்து நீக்க முயலுதல் நல்லோர் இயல்பாதலால் வடலூர் வள்ளல் அந்நெறியில் இயங்குமிடத்துச் சிறுவர்களை அடித்து ஒறுத்தற்கு உள்ளம் எழுமாயினும் அதன் விளைவாக அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அஞ்சி மனம் வருந்தினமை புலப்பட, “தீ கண்டாங்கே அடித்திடற் கஞ்சி உளைந்தனன்” என்று உரைக்கின்றார். தீமையை விலக்குதற்கு ஏற்ற வன்மையில்லாத பொழுது எய்திய வருத்தத்தை “ஆற்றிடாக் காலத்தில் சிறிதே பொடித்து நான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்” என்று விண்ணப்பிக்கின்றார். பொடித்தல் - வெகுளுதல். புந்தி -திருவுள்ளம். உள்ளத்தில் மிக்கெழும் சினத்தை “வெடித்த வெஞ்சினம்” எனவும், சினமெழுந்து பொங்குவது கண்டு அதன் தீமை யுணர்ந்து வருந்தினமை புலப்பட, “சினம் என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய்” எனவும் விளம்புகின்றார்.

     இதனால், வெவ்விய சினமாகி குற்றம். தன்கண் எழுதற்கு வடலூர் வள்ளல் அஞ்சினம் தெரிவித்தவாறாம்.

     (37)